சென்னை: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு பிப். 9ஆம் தேதி தொடங்கி பிப். 17ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
மேலும், அரசு தேர்வுத்துறையின் சார்பில் பொதுத் தேர்வினை போல் திருப்புதல் தேர்வு நடத்தப்பட வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், அரசு தேர்வுத்துறையின் விதிமுறைகளை பின்பற்றாமல் அனைத்து பள்ளிகளுக்கும் முன்கூட்டியே வினாத்தாள்களை திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வழங்கியிருந்தார்.
லீக் ஆகும் வினாத்தாள்கள்
இதனால், பிப். 13ஆம் நடைபெற்ற 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் பாடம், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கணிதம் பாடம் ஆகியவற்றின் வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்கூட்டியே வெளியானது. இதேபோல், நேற்று (பிப். 14) 12ஆம் வகுப்பு வணிகவியல் தேர்வுக்குரிய வினாத்தாளும் முன்கூட்டியே வெளியானது.
இந்நிலையில், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று (பிப். 15) நடைபெறக்கூடிய உயிரியல், வணிக கணிதம் தேர்வுகளுக்கான வினாத்தாள்களும் முன்கூட்டியே வெளியாகியுள்ளன.
வினாத்தாள்களை சரியாக கையாளாத கல்வித்துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் லீக் ஆகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தவறு செய்த அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுத்தது போன்று, இதற்கு யார் காரணம் என்பதைக் கண்டறிந்து முழுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பள்ளிக் கல்வித்துறையினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு