தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி வரும் 27ஆம் தேதி தொடங்கும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் அறிவித்த நிலையில், ஆசிரியர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யும் விதமாக இந்தாண்டு விடைத்தாள் திருத்தும் மையங்கள் 200க்கும் மேல் அதிகரிக்கப்பட்டுள்ளன. கடந்தாண்டு 70 மையங்களே இருந்த நிலையில், உரிய தனி நபர் இடைவெளியை உறுதிசெய்யும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு காலத்தில் முறையான முன்னேற்பாடுகளுடன் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய சூழலில், அதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறையை(மதிப்பீட்டை நடத்துவதற்கான நிலையான இயக்க நடைமுறை) வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் அனைவருக்கும் பாதுகாப்பான அரசு அல்லது தனியார் பேருந்து போக்குவரத்து வசதி உறுதிசெய்யப்படும். வெளிமாவட்டத்திற்கு சென்று விடைத்தாள் திருத்த வேண்டிய ஆசிரியர்களுக்கு இ-பாஸ் இல்லாமல் பயணம் செய்யவதற்கு அனுமதி அளிக்கப்படும். ஆசிரியர்கள் தங்கள் அடையாள அட்டையை மட்டும் வைத்திருந்தால் போதும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடைத்தாள் திருத்தும் பணிகளை மேற்கொள்ளும் மையம் கரோனா அதிகம் உள்ள பாதுகாக்கப்பட்ட மண்டலத்தில் இருக்கக்கூடாது என்பதை தலைமை கல்வி அலுவலர் உறுதி செய்ய வேண்டும். மேலும், விடைத்தாள் திருத்தும் பணியை மேற்கொள்ளும் ஆசிரியர்களின் குறைவான பயண தூரம் குறைவாக இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விடைத்தாள் திருத்தும் அறையில், குறைந்த அளவிலான திருத்துனர்கள் மட்டும் உரிய தனி நபர் இடைவெளியுடன் பணியில் ஈடுபட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கரோனா பாதுகாப்பு மண்டலத்தில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் விடைதிருத்தும் பணியில் ஈடுபடக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பணியிடங்கள் அனைத்தும் அரசின் வழிகாட்டுதல்படி உரிய சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, உரிய விதத்தில் தனிநபர் இடைவெளி பின்பற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை தலைமை கல்வி அலுவலர்கள் உறுதிபடுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
இதையும் படிங்க: சென்னையில் கரோனா இறப்பு விகிதம் 0.7% - ராதாகிருஷ்ணன் தகவல்