சென்னை: அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவிட் 19 சிறப்பு சிகிச்சை மையமாக 850 ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் செயல்பட்டுவருகிறது.
தற்போது அதிகரித்துவரும் கோவிட்19 மூன்றாம் அலையை எதிர்கொள்ள, 1100 படுக்கை வசதிகள் வரை அதிகப்படுத்த தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் அனைத்துப் படுக்கைகளும் ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்கள் கொண்டு செயல்படும்.
பல மருத்துவப் பணியாளர்களின் பங்களிப்பு
மேலும் 100 குழந்தைகள் சிறப்பு சிகிச்சை படுக்கைகள், 15 குழந்தைகள் தீவிர சிசிச்சைப் படுக்கைகள் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பெருந்தொற்றினைச் சமாளிக்கும் வகையில் 200 வென்டிலேட்டர் கருவிகள், 800-க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்கள், இரண்டு அதிநவீன ஆக்சிஜன் தயாரிக்கும் இயந்திரங்கள், 34 KLD சேமிப்பு அளவிலான திரவ ஆக்சிஜன் கொள்கலன் ஆகியன தயார் நிலையில் உள்ளன.
200-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், 300-க்கும் மேற்பட்ட செவிலியர், 400-க்கும் மேற்பட்ட இதர மருத்துவப் பணியாளர்கள் இந்தக் கரோனா பெருந்தொற்று சூழ்நிலையில் பணியாற்றிவருகின்றனர்.
தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு ஆக்சிஜன் வசதி தேவை
தற்போது உள்நோயாளியாக அனுமதிக்கப்படும் நோயாளிகள், மிகவும் லேசான அறிகுறிகளுடன் ஆக்சிஜன் சிகிச்சை தேவைப்படாத நிலையில் உள்ளனர். தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதோர் அல்லது ஒரு ஊசி மட்டுமே செலுத்திக்கொண்டோருக்கு மட்டுமே ஆக்சிஜன், தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது என மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி தேர்வு திடீர் ஒத்திவைப்பு