சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஏப்.21) கேள்வி நேரத்தில் நடந்த விவாதத்தின்போது, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அரசுப்பள்ளி சத்துணவு மையங்களுக்கு ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் வைப்பறையுடன் கூடிய சமையலறைகள் அமைப்பது உள்ளிட்ட 14 புதிய திட்டங்கள் குறித்து அறிவித்துள்ளார்.
அதன்படி, அவை பின்வருவமாறு:
1. ரூ.112.83 கோடி மதிப்பீட்டில் 2100 அரசுப்பள்ளி சத்துணவு மையங்களுக்கு ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் வைப்பறையுடன் கூடிய சமையலறைகள் கட்டப்படும்.
2. மூத்த குடிமக்கள் நலனுக்காக சமூக நல இயக்கத்தில், தனி அலகு ஒன்று உருவாக்கப்படும்.
3. சமூக நலன், சமூகப்பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டம் ஆகியவற்றின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஒருங்கிணைத்து கண்காணிப்பதற்காக தலைமைச்செயலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையில் திட்ட மேலாண்மை அலகு ஒன்று ஏற்படுத்தப்படும்.
4. மூத்தகுடிமக்களுக்கான ஒருங்கிணைந்த வளாகம் கட்டுவதற்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவான சாத்தியக்கூறாய்வு மேற்கொள்ளப்படும்.
5. வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உறுதுணையான சேவைகள் அனைத்தையும் ஓரிடத்தில் வழங்கிட பத்து மாநகராட்சிகளில் ரூ.11 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த சேவை மையங்கள் அமைக்கப்படும்.
6. தமிழ்நாட்டில் பாலினம் குறித்த நிதி நிலை அறிக்கையை உறுதி செய்வதற்காக அனைத்துத்துறைகளிலும் பாலின வரவு செலவு திட்டம் உருவாக்கப்படும்.
7. ரத்த சோகையைத்தடுக்க 19 மாவட்டங்களில் தன் சுத்தம், குடற்புழு நீக்கம், கை கழுவுதல் உள்ளிட்ட விரிவான தீவிர விழிப்புணர்வு இயக்கம் ரூ.4.75 கோடி மதிப்பீட்டில் நடத்தப்படும்.
8. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டப்பணிகள் வழங்கும் சேவைகள் பயனாளிகளை சென்றடைவதை கண்காணிக்கும் பொருட்டு ரூ.1.50 கோடி செலவினத்தில் கணினிமயமாக்கப்பட்ட பயனாளிகள் சேவை மையம் அமைக்கப்படும்.
9. மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்ட மையங்களில் குழந்தைகளின் முதல் 1000 நாட்கள் குறித்த விழிப்புணர்வை ரூ.1.74 கோடி செலவினத்தில் ஏற்படுத்தப்படும்.
10. எடை குறைவுடன் பிறக்கும் குழந்தைகளைக் கண்காணித்திட ரூ.85 லட்சம் செலவினத்தில் 1000 எண்ணிக்கையிலான மின்னணு தொழில் நுட்ப வளர்ச்சி கண்காணிப்புக் கருவிகள் வழங்கப்படும்.
11. செங்கல்பட்டு மாவட்டத்தில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு இல்லத்திற்கான புதிய கட்டடம் ரூ.15.95 கோடி செலவினத்தில் கட்டப்படும்.
12. சென்னை மாவட்டத்தில் கூடுதலாக மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலகு ஒன்றை ரூ.68.53 லட்சம் செலவினத்தில் அழைக்கப்படும்.
13. மாற்று கருவறை தாய் மூலம் குழந்தைகள் பெற்று பராமரிக்கும் அரசுப்பெண் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 270 நாட்கள் குழந்தைப் பராமரிப்பு விடுப்பு வழங்கப்படும்.
14. தமிழ்நாட்டில் குழந்தைகள் இல்லங்கள் அதிக அளவில் உள்ள ஆறு மாவட்டங்களில் அவ்வில்லக் குழந்தைகள் பயன்பெறும் வகையில் வாழ்வியல் வழிகாட்டும் மையங்கள் ரூ.48.24 லட்சம் செலவினத்தில் அமைக்கப்படும்.
இதையும் படிங்க: மெரினா-கோவளம் கடற்கரைப் பகுதி ரூ.100 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படும் - அமைச்சர் முத்துசாமி