சென்னை: சட்டப்பேரவையின் விவாதநாளின் இறுதி நாளான (மார்ச் 24) இன்று தமிழ்நாட்டிலுள்ள அரசுக்கல்லூரிகளில் மாணவ-மாணவிகளின் விடுதிகளைப் புதுப்பிக்கும் வகையில் பெருந்தலைவர் காமராஜர் அரசு கல்லூரி மேம்பாட்டுத்திட்டம் (Kamarajar Govt College Development Project) என்ற பெயரின்மூலம், அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1000 கோடி செலவில் அரசு கல்லூரிகள் மேம்படுத்தப்படும் என நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
மேலும், வரும் 5 ஆண்டுகளில் 1,000 கோடி ரூபாய் செலவில் இந்த சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும்; இந்த சிறப்புத் திட்டத்திற்கு "பெருந்தலைவர் காமராஜ் அரசு கல்லூரி மேம்பாட்டுத் திட்டம்" என்று பெயரைச் சூட்டி, முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார் என்றும் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
பேராசிரியர் அன்பழகன் பள்ளிகள் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் பள்ளிகளில் வகுப்பறைகள் மட்டுமல்லாது கழிப்பிடம் மற்றும் பெண்களுக்குத் தேவையான பல்வேறு கட்டமைப்புகள் அமைக்கப்படும் என்றார்.
எம்.சி.ராஜா மாணவர் விடுதி: மேலும் அவர், '40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை நந்தனம் எம்.சி.ராஜா நவீன விடுதி 6 தளங்களாகக் கட்டப்படும் என்றும்; சென்னை சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி.ராஜா விடுதி கடந்த 1961ஆம் ஆண்டு பட்டியல் இன மாணவர்களுக்காக கட்டப்பட்டது. அது தற்போது பழமையாகவும் சிதைந்து இருப்பதாலும் கூடுதல் விடுதிகள் கட்டப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.
அந்த அடிப்படையில் ஆறு தளங்களைக் கூடிய நவீன விடுதி காலியாக உள்ள 75,000 சதுர அடியில் 40 கோடி ரூபாயில், கூடுதலாக விடுதி கட்டடம் கட்ட உத்தரவிட்டு இருக்கிறார். இதன் அடிப்படையில் காலியாக உள்ள இடத்தில் 75,000 சதுர அடியில், நவீன மாணவர் விடுதி ரூபாய் 40 கோடி ரூபாயில் கட்டப்படும்’ என்றும் கூறினார்.
மூவலூர் ராமாமிர்தம் திட்டத்தின் அரசுப்பள்ளியில் 10ஆம் வகுப்பு முடித்து பாலிடெக்னிக் கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதையும் படிங்க: 'எரிபொருள் விலை உயர்வை திரும்பபெறாவிட்டால் ரயில் மறியல்'.. நாக்பூரில் சிவசேனா எச்சரிக்கை!