கரோனா தொற்று காரணமாக தமிழ்நாட்டில் கடந்த 10-11-2020ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிலுள்ள திரையரங்குகளில் 50 விழுக்காடு இருக்கைகளுடன் திரையரங்குகளைத் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியிருந்தது.
இந்நிலையில் நடிகர் விஜய் கடந்த வாரம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து திரையரங்கில் 100 விழுக்காடு பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில் இன்று(ஜனவரி 4) தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் 100 விழுக்காடு இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி ஆணை பிறப்பித்துள்ளது.
அதன்படி அரசு வெளியிட்டுள்ள ஆணையில், இதுவரை திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதியளித்திருந்த நிலையில், தற்போது 100% இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று நோய்க்கிருமிகள் குறைந்துவந்த நிலையில், திரையரங்குகளில் உள்ள இருக்கைகளை அதிகரிக்க வேண்டும் எனத் திரையரங்கு உரிமையாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அரசிடம் கோரிக்கை வைத்து வந்தனர். இதனால் திரையரங்குகளில் 50%ல் இருந்து 100% வரை, பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, இருக்கைகளை அதிகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், திரையரங்குகளில் காட்சி தொடங்குவதற்கு முன்பு, படம் பார்க்க வருபவர்களை தெர்மல் பரிசோதனை உள்ளிட்ட பாதுகாப்பு பரிசோதனைகளை செய்து உள்ளே அனுமதிக்குமாறும் தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது.
மேலும் சமூக விலகல், கரோனா வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டுமென்றும் தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ஏற்கெனவே கிருமி நாசினி கொண்டு திரையரங்குகள் முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும் என்றும்; பார்வையாளர்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
எனவே, பொங்கல் தினத்தன்று வெளிவரும் பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 'அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்'