சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சீனுவாசன் 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகைக்கு அனுப்பியுள்ள அழைப்பாணையில் (நோட்டீஸ்), "இஸ்ரேல் நாட்டிடமிருந்து பெகாசஸ் உளவு மென்பொருளை வாங்கி, இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகள், நீதிபதிகள், அரசு அலுவலர்கள் ஆகியோரை மத்திய அரசு உளவு பார்த்ததாக 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகை ஜனவரி 28ஆம் தேதி புலனாய்வு கட்டுரை ஒன்றை பிரசுரித்திருந்தது.
இச்செய்தியில் சிறிதளவும் உண்மை இல்லை. இந்தியாவிற்கு உலக நாடுகளிடம் அவப்பெயர் ஏற்படுத்தி உள்ளது. இக்கட்டுரையால் நாட்டிற்கும் இந்தியர்களுக்கும் மிகப்பெரிய அவமானம் ஏற்பட்டுள்ளதால், இந்த அழைப்பாணை கிடைத்த ஒரு வாரத்தில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை முதல் பக்கத்தில் வருத்தம் தெரிவித்து செய்தி பிரசுரிக்க வேண்டும்.
தவறினால், பத்திரிகை, புலனாய்வு கட்டுரையாளர்களுக்கு எதிராக 100 கோடி ரூபாய் அல்லது அமெரிக்க மதிப்பில் 14 மில்லியன் டாலர் கேட்டு மான நஷ்ட வழக்குத் தொடரப்படும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
வழக்கறிஞரின் இந்த அழைப்பாணை குறித்து, சம்பந்தப்பட்ட நிறுவனம் பதிலளிக்க வேண்டுமா, சட்ட ரீதியாக என்ன அதிகாரம் உள்ளது? போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. இதற்கு மூத்த வழக்கறிஞர் கே.எம். விஜயன் தரும் விளக்கங்களைப் பார்க்கலாம்.
பதில் சொல்ல அவசியம் இல்லை
"இந்திய எல்லையைத் தாண்டி ஒரு வழக்கறிஞர் ஒரு நிறுவனத்தின் மீது தனிப்பட்ட முறையில் மான நஷ்ட நோட்டீஸ் அனுப்ப எந்தச் சட்ட அதிகாரமும் இல்லை. அதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனமும் பதில் அளிக்க வேண்டும் என்ற கட்டாயமோ, அவசியமோ, இல்லை.
வழக்கறிஞருக்கு எந்த வகையிலும் அந்த நிறுவனத்தால் பாதிப்பில்லை. தனி ஆளாக வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்புவதால், சம்பந்தப்பட்ட நிறுவனம் வழக்கறிஞருக்குப் பயந்தோ, கட்டுப்பட்டோ பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
ஒருவேளை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதாக இருந்தால், 'டார்ட்' பிரிவின்கீழ் குற்ற வழக்காக இருக்கும்பட்சத்தில் 495 ஐபிசியின் கீழ் (இந்திய தண்டனைச் சட்டம்) வழக்குத் தொடரலாம். உரிமையியல் வழக்காக இருந்தால் 100 கோடி ரூபாய் மான நஷ்ட வழக்குக்கு 80 லட்சம் ரூபாய் நீதிமன்ற கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
எந்த வழக்கறிஞரும் தனி ஆளாக 80 லட்சம் ரூபாய் செலவு செய்து வழக்குத் தொடர மாட்டார்கள். அப்படியே வழக்குத் தொடர்ந்தாலும் பதில் சொல்ல வேண்டும் என்ற கட்டாயம் அந்த நிறுவனத்துக்கு இல்லை என்பதால் இது முழுக்க முமுக்க விளம்பரத்திற்காக அனுப்பப்பட்ட அழைப்பாணையாகவே கருத வேண்டும்" என்கிறார்.