சென்னை: கரோனா பரவலை தடுக்கும் விதமாக இன்று (ஜன.15) 17ஆம் தேதிவரை 3 நாட்கள் சென்னையில் கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இதையடுத்து மெரினா கடற்கரைக்குள் பொதுமக்கள் செல்லாதபடி சென்னை காவல் துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கு வரை அனைத்து நுழைவு பகுதியிலும் தடுப்புகளை காவல் துறை அமைத்துள்ளது.
அதேபோல் 100க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தடையை மீறி கடற்கரைக்குள் நுழைபவர்களை காவல் துறையினர் எச்சரித்து அனுப்பி வைக்கின்றனர். அதனை மீறுபவர்களை கைது செய்ய திட்டமிட்டுள்ளனர்.
காமராஜர் சாலையில் மட்டுமே போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடற்கரை சர்வீஸ் சாலையில் எந்த வாகனங்களுக்கும் அனுமதியில்லை. போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதைபோல பெசன்ட் நகர் கடற்கரை உள்பட பிற கடற்கரைகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறை செய்துள்ளது. காணும் பொங்கல் பண்டிகையின்போது யாரேனும் பைக் ரேசில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி 2 கூடுதல் ஆணையர்களின் தலைமையில் 4 இணை ஆணையர்கள் மேற்பார்வையில், 12 துணை ஆணையர்கள் உட்பட சென்னை முழுவதும் 10 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
காணும் பொங்கல் அன்று மாட்டு வண்டிகளில் ஊர்வலமாக செல்லவும் போலீசார் தடை விதித்துள்ளனர். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மாட்டுப் பொங்கல் பண்டிகை: கடலூர் துறைமுகத்தில் மீன் விற்பனை அமோகம்!