பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்கும் வகையில், இந்திய அரசியல் சாசனத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிறைவேற்றப்பட்ட இச்சட்டத்திருத்தப்படி, தமிழக கல்வி நிறுவனங்களில் 2020-21 ஆம் கல்வியாண்டில் இட ஓதுக்கீட்டை அமல்படுத்த உத்தரவிடக் கோரி, அம்பாசமுத்திரம் ராஜகோபால சுவாமி குலசேகர ஆழ்வார் கோவில் அர்ச்சகர் பெரிய நம்பி நரசிம்ம கோபாலன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
மனுவில் அவர், பொருளாதார ரீதியில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீட்டை நாட்டின் பிற மாநிலங்கள் அமல்படுத்தி வரும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் அமல்படுத்தப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். 10% இட ஒதுக்கீடு பெறும் வகையில் வருமானம், சொத்து சான்றுகளை வழங்க அரசு உத்தரவிட்டுள்ள போதும், கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
கல்வி நிறுவனங்களில் 10% இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அரசு எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என, உயர்கல்வித்துறையும், கல்லூரி கல்வி இயக்குநரகமும், பல்கலைக்கழகங்களும், தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ளதாகவும் மனுவில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதனால், 2020-21 ஆம் கல்வியாண்டில் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத் திருத்தத்தை அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட மனுவில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, மனுவுக்கு ஜூலை இரண்டாவது வாரத்திற்குள் பதிலளிக்கும்படி தலைமைச் செயலாளர், உயர் கல்வித்துறை செயலாளர் மற்றும் கல்லூரி கல்வி இயக்குநருக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.
இதையும் படிங்க: 'தப்லீக் ஜமாஅத் அமைப்பினர் மீது தொடரப்பட்ட வழக்குகள் விசாரணைக்கு உகந்ததா?' - விரைவில் தீர்ப்பு