சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக 'வாட்ஸ்அப் குழு மூலமாக தவறாக வதந்தியைப் பரப்பி வன்முறையைத்தூண்டும் வகையில் செயல்படுவோரை சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், இதுபோன்ற தவறான வதந்திகள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' எனவும் சென்னை காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி கடந்த 13ஆம் தேதி சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்தார். இது தொடர்பாக நடைபெற்று வந்த போராட்டம் கடந்த 17ஆம் தேதி வன்முறையாக வெடித்தது. இதில் சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி சூறையாடப்பட்டு பள்ளியில் இருந்த கல்விச்சான்றிதழ்கள், வாகனங்களுக்குப் போராட்டக்காரர்கள் தீவைத்தனர்.
வன்முறையாளர்களின் தாக்குதலில் சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக சுமார் 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். இது தவிர சமூக வலைதளங்கள் மூலமாக வன்முறையைத் தூண்டும் வகையில் வதந்தியைப் பரப்பியதற்காகவும் 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக Justice for Srimathi என்ற பெயரில் வாட்ஸ்அப் குழு அமைத்து வன்முறையைத் தூண்டும் வகையில் செயல்பட்டதாக சென்னையைச் சேர்ந்த 4 மாணவர்களை அண்ணா சாலை மற்றும் திருவல்லிக்கேணி போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் தண்டையார்பேட்டையைச் சேர்ந்த சுனில் குமார் (எ) செந்தமிழன் என்ற ஒரு மாணவனை அண்ணா சாலை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
மெரினாவில் 2500 பேரைக்கூட்டி போராட்டம் நடத்த திட்டம்?: குறிப்பாக மாணவன், தான் தொடங்கிய வாட்ஸ்அப் குழுவில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாகவும், மெரினாவில் 2,500 பேரைக் கூட்டி போராட்டம் நடத்த திட்டமிட்டதாகவும், முதலமைச்சர் கண்ணில் போராட்டம் படவேண்டும் எனக்கூறி போராட்ட உணர்வைத் தூண்டிவிடும் வகையில் பேசியதாகவும் கூறியது தொடர்பான ஆடியோ பதிவு போலீசாரிடம் சிக்கியதைத் தொடர்ந்து, அந்த மாணவனை போலீசார் கைது செய்தனர்.
இது தவிர, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் திருவள்ளூரைச் சேர்ந்த ஆகாஷ் என்பவர் உட்பட 3 மாணவர்களிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணையைத் தொடர்ந்து அவர்களும் கைது செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போலீசார் குவிப்பு: எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மெரினாவில் விவேகானந்தர் இல்லம் முதல் கண்ணகி சிலை வரையிலும் சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், மெரினா கடற்கரை முழுவதும் டிரோன் மூலமாக போலீசார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சான்றிதழ் இழந்த பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்க நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ்