ஐதராபாத்: நாட்டின் பழமையான தனியார் வங்கிகளில் ஒன்றான தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி பங்குச்சந்தையில் பொதுப்பங்குகளை வெளியிட செபி அனுமதி அளித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஐ.பி.ஓ.வுக்கு விண்ணப்பித்த நிலையில் தற்போது தான் அனுமதி கிடைத்துள்ளது.
இனிஷியல் பப்ளிக் ஆபர் எனப்படும் பொதுப்பங்கு வெளியீட்டின் கீழ், சுமார் 1 கோடியே 58 லட்சம் புதிய பங்குகளும், பங்குதாரர்களிடமிருந்து 12 ஆயிரத்து 505 பங்குகளும் பொதுப்பங்கு விற்பனைக்கு வரவுள்ளன. டி.பிரேம் பழனிவேல், பிரியா ராஜன், பிரபாகர் மகாதியோ போப்டே, நரசிம்மன் கிருஷ்ணமூர்த்தி, எம்.மல்லிகாராணி மற்றும் சுப்பிரமணியன் வெங்கிடேஸ்வரன் ஐயர் ஆகியோர் வசமுள்ள பங்குகள் விற்பனைக்கு வர உள்ளன.
தமிழகத்தில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையும் பாரம்பரியமும் கொண்ட மெர்க்கண்டைல் வங்கி ஆரம்பத்தில் நாடார் வங்கியாக துவங்கப்பட்டு பின்னர் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தற்போதைய நிலவரப்படி நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட கிளைகளை பரப்பி பிரமாண்ட சாம்ராஜ்யத்தை நிறுவியுள்ளது. இந்த வங்கியின் பொதுப்பங்கு வெளியீட்டுக்கு முதலீட்டாளர்களிடம் பெரும் ஆர்வமும் எதிர்பார்ப்பும் நிலவி வந்த நிலையில், நீண்ட கால எதிர்பார்ப்புக்கு முடிவு கிடைத்துள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி விவகாரத்தில் நடப்பது என்ன? - ஓர் அலசல்