மத்திய அரசின் 2019-20ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அரசு பொதுத் துறை நிறுவனங்களில் அரசு பங்குகளைக் குறைப்பது, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான 25 விழுக்காடு வரி உட்பட அறிவிப்புகளால் இந்தியப் பங்குச்சந்தைகள் வீழ்ச்சியடையத் தொடங்கியது.
மேலும், நேற்று பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் பூஷனின் பவர் & ஸ்டீல் நிறுவனம் பெற்ற 3,800 கோடி ரூபாய் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என்று ரிசர்வ் வங்கியிடம் தெரிவித்திருந்தது. இதன் காரணமாக இன்று பங்குச் சந்தைகள் தொடங்கியதிலிருந்து கடும் வீழ்ச்சியைச் சந்திக்கத் தொடங்கியது.
முக்கியமாக ஆட்டோமொபைல், பொதுத் துறை வங்கிகளின் பங்குகள் காலையிலிருந்தே கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் பங்குகள் 11 விழுக்காடு குறைந்து 72.80 ரூபாய்க்கும், பாரத ஸ்டேட் வங்கியின் பங்குகள் 4.1 விழுக்காடு குறைந்து 355.25 ரூபாய்க்கும் விற்பனையானது. அதேபோல பஜாஜ் பைனான்ஸ், ஓஎன்ஜிசி, எஸ் பேங்க் உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்களின் பங்குகளும் வீழ்ச்சியைச் சந்தித்தது.
இன்றைய வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 793 புள்ளிகள் குறைந்து 38,721 புள்ளிகளிலும் தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 253 புள்ளிகள் குறைந்து 11,559 புள்ளிகளிலும் வர்த்தகம் நிறைவுபெற்றது