டெல்லி: இணையதளம் மற்றும் செயலிகள் வழியாக காப்பீடு திட்டங்களை பயனர்களுக்கு அளித்து வரும் பாலிசி பஜார் நிறுவனம்,பங்கு வெளியீடு செய்வதற்கான ஆவணங்களை செபியிடம் சமர்ப்பித்துள்ளது.
பாலிசி பஜார் பங்குகள் பொது வெளியீட்டின் மூலம், 6,017.50 கோடி ரூபாய் திரட்ட நிறுவனம் முடிவுசெய்துள்ளது. புதிதாக 3,750 கோடி ரூபாய் முதலீட்டாளர்களிடம் இருந்து திரட்ட திட்டமிட்டுள்ள நிறுவனம், தற்போது நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பவர்களின் பங்குளை சலுகை விற்பனை மூலம் ரூ.2.267.50 கோடி திரட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சலுகை பங்கு விற்பனைக்கு நிறுவனத்தின் முக்கிய முதலீட்டாளர்களான எஸ்விஎஃப் பைத்தான் 2 ரூ. 1,875 கோடி மதிப்பிலான பங்குகளையும், யாஷிஷ் தாகியா ரூ.250 கோடி மதிப்பிலான பங்குகளையும் விற்கவுள்ளனர்.
பாலிசி பஜார் நிறுவனத்தில் ஏற்கெனவே சாஃப்ட்பேங்க் குரூப் கார்ப், டைகர் குளோபல், டென்செண்ட் ஹோல்டிங்ஸ் ஆகிய சர்வதேச நிறுவனங்கள் பல கோடி முதலீடு செய்துள்ளன.
பாலிசி பஜாரின் பங்கு வெளியீட்டிற்கான மேலாண்மை நிர்வாக செயல்பாடுகளை கோட்டக் மஹிந்திரா கேபிடல் நிறுவனம், மோர்கன் ஸ்டான்லி இந்தியா நிறுவனம், சிட்டிக்ரூப் குளோபல் மார்க்கெட்ஸ் இந்தியா, ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ், எச்டிஎஃப்சி வங்கி, ஐஐஎஃப்எல் செக்யூரிட்டீஸ் அண்ட் ஜெஃபரீஸ் இந்தியா ஆகிய நிதி நிறுவனங்கள் ஏற்றுள்ளது.
பங்குகள் பொது வெளியீட்டின் மூலம் முதலீடுகளை பெருக்க திட்டங்களை வகுத்திருக்கும் பாலிசி பஜார், வெளிநாட்டு பங்கு வர்த்தக முகமைகளிலும் தங்களின் இருப்பை உறுதி செய்ய, திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
நிதி உள்ளிட்ட முக்கிய துறைகள் சார்ந்த நிறுவனங்களை வெளிநாட்டு சந்தைகளில் இந்தியா அனுமதிப்பதில்லை. ஆனால் இந்த கட்டுப்பாடுகளை தளர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே பல்வேறு இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவிலும், சிங்கப்பூரிலும் பட்டியலிடப்பட்டுள்ளன.