கரோனா பரவல் காரணமாக, நாடு முழுவதும் ஆட்டோமொபைல் துறை பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதத்திற்கான பயணிகள் வாகனங்களின் தரவுகளை, இந்திய ஆட்டோமொபைல் டீலர்ஸ் சங்கங்களின் கூட்டமைப்பு (FADA) வெளியிட்டுள்ளது.
இதில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தைக் காட்டிலும், நடப்பு ஆண்டு அக்டோபர் மாதத்தில், பயணிகள் வாகனங்கள் 8.8 விழுக்காடாக சரிந்துள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் மட்டும் 2,73,980 பயணிகள் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், ரீடெயில் விற்பனை விழுக்காடு 9 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.
குறிப்பாக, கடந்த அக்டோபர் மாதம் இருச்சக்கர வாகனங்களின் விற்பனை விகிதம் 26.83 விழுக்காடாக சரிந்து, கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 14,23,394 ஆக இருந்த வாகனங்களின் விற்பனை, நடப்பு ஆண்டு அதே மாதத்தில், 10,41,682 ஆக குறைந்துள்ளது.
லாரி போன்ற சரக்கு வாகனங்களின் விற்பனை விகிதம் 30.32 விழுக்காடாக சரிந்து, கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 63,837 வாகனங்கள் விற்பனையான நிலையில், இந்த ஆண்டு அதே மாதத்தில், 44,480 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.
அதேபோல மூன்று சக்கர வாகனங்களின் கடந்த மாதம் 64.5 விழுக்காடு சரிந்துள்ளது. 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 63,837 வாகனங்கள் விற்பனையான நிலையில், நடப்பு ஆண்டு அதே மாதத்தில் 22,381 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.
டிராக்டர் விற்பனை 55 விழுக்காடாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 35,456 வாகனங்கள் விற்பனையான நிலையில், நடப்பு ஆண்டு 55,154 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.
இதுகுறித்து பேசிய ஃபாடா (FADA) தலைவர் வின்கேஷ் குலாட்டி கூறுகையில், இருசக்கர வாகனங்களின் தேவை பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது. ஆனால், ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள கரோனா பாதிப்பு மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக, அங்கிருந்து இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் உதிரி பாகங்களின் கொள்முதலில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சரியான நேரத்தில், உதிரி பாகங்கள் வந்தடையாத காரணத்தால் வாகனங்களின் உற்பத்தி குறைந்து, விழா காலங்களில் வாகன விற்பனையின் போது பெருமளவு சலுகை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சரக்கு வாகனங்கள் மாநிலம் விட்டு மாநிலம் செல்லலாம் என கரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட காரணத்தால், அந்த வாகனங்களின் தேவை மட்டும் அதிகரித்து, விற்பனையும் உயர்ந்துள்ளது.
இந்த சரிவினை ஈடு செய்ய மத்திய அரசு புதிய ஸ்கிரேப்பேஜ் (scrappage policy) கொள்கையைக் கொண்டு வர வேண்டும். அதேபோல உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும்." என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: