கோவிட்-19 தொற்று காரணமாக கச்சா எண்ணெயின் தேவை முன்னெப்போதும் இல்லாத வகையில் குறைந்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவுக்குச் சரிந்துள்ளது. அமெரிக்காவில் முதன்முறையாக நேற்று கச்சா எண்ணெய் விலை 0-க்கு கீழ் குறைந்து -54.61 டாலர்கள் வரை வர்த்தகமாகின.
இந்நிலையில், இன்று இந்திய பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கியது முதல் பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது. மும்பைப் பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்றைவிட 900 புள்ளிகள் குறைந்து இன்றைய வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளது. அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 230 புள்ளிகள் குறைந்து தனது வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளது.
தற்போது மும்பைப் பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 871 புள்ளிகள் குறைந்து 30,775 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 241 புள்ளிகள் குறைந்து 9020 புள்ளிகளிலும் வர்த்தகமாகிவருகிறது.
குறிப்பாக மருதி நிறுவனத்தின் பங்கு விலை ஏழு விழுக்காடு வரை குறைந்துள்ளது. அதேபோல ஐடிசி ஸ்டீல், இண்டஸ்இண்ட் வங்கி, பஜாஜ் நிதி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஓஎன்ஜிசி ஆகிய நிறுவனத்தின் பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன. அதே நேரம் சன் பார்மா, நெஸ்லே இந்தியா, எச்.யூ.எல், ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் ஐ.டி.சி. ஆகியவற்றின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.
சர்வதேச அளவிலும் ஷாங்காய், ஹாங்காங், டோக்கியோ, சியோல் ஆகிய பங்குச் சந்தை சரிவையே சந்தித்துள்ளன.
இதையும் படிங்க: வரலாறு காணாத வீழ்ச்சி: பூஜ்ஜியத்துக்கும் கீழ் கச்சா எண்ணெய் விலை