கடந்த சில மாதங்களாகவே நாட்டில் கடும் பொருளாதார மந்த நிலை நிலவிவருகிறது. அதன் தாக்கமானது பங்குச்சந்தையிலும் கடுமையாக எதிரொலிக்கவே இரு மாதங்களில் கடுமையான சரிவை பங்குச்சந்தை சந்தித்து வந்தது.
இந்நிலையில் பொருளாதாரச் சிக்கலை சீர்செய்யும் விதமாக, பெருநிறுவனங்களுக்கான வரியை 30 சதவிகித்திலிருந்து 22 சதவிகிதமாக குறைப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பு வெளியானது கடந்த வெள்ளியன்று பங்குச்சந்தை ராக்கெட் வேகத்தில் அதிகரித்தது. கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மும்பைப் பங்குசந்தை சுமார் 2000 புள்ளிகள் வரை அதிகரித்து 38 ஆயிரத்து 14 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
இதையும் படிங்க: Market update: 2,000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த பங்குச்சந்தை!
இதற்கிடையே இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பின்னர் இன்று காலை தொடங்கிய பங்குச்சந்தை மீண்டும் உயர்வைச் சந்தித்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து 38 ஆயிரத்து 700 புள்ளிகளுக்கும் மேல் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 200 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 11 ஆயிரத்து 500 புள்ளிகளைத் தாண்டி வர்த்தகம் நடைபெறுகிறது.
வாரத்தில் தொடக்க நாளில் பங்குச்சந்தை உயர்வுடன் தொடங்கியுள்ளது என்பது வர்த்தகர்களிடையே மகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது. இந்த ஆரோக்கியமான சூழல் தொடரும்பட்சத்தில் இன்னும் சில நாட்களில் சென்செக்ஸ் 40 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டி வர்த்தகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இனி பங்குச்சந்தைக்கு ஏறுமுகம்தான்...! - நிபுணர் அருள் ராஜ் சிறப்புப் பேட்டி