நாட்டின் பொருளாதார மந்தநிலையின் தாக்கம் வர்த்தகச்சூழலை பெரிதும் பாதித்துள்ள நிலையில் அதன் தாக்கம் பங்குச்சந்தையிலும் கடுமையாக எதிரொலித்துவருகிறது. கடந்த சில மாதங்களாகவே பங்குச்சந்தைகள் பெரும் ஏற்ற இறக்கங்களை சந்தித்துவருகின்றது.
சுமார் 40 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமாகி வந்த மும்பை பங்குச்சந்தை 36 ஆயிரம் புள்ளிகளாகவும், 12 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமாகி வந்த தேசிய பங்குச்சந்தை 10ஆயிரம் புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகிறது.
இந்த வார வர்த்தகத்தின் முதல் இரண்டு நாட்கள் கடும் சரிவை இந்திய பங்குச்சந்தைகள் கண்டன. மூன்றாம் நாளான நேற்று அதிசயத்தக்க வகையில் எழுச்சியை கண்டது. இந்நிலையில், இன்று காலை வர்த்தகத்தை சரிவுடன் தொடங்கியுள்ளது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 250 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 36 ஆயிரத்து 272 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 80 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 10 ஆயிரத்து 754 புள்ளிகளில் வர்த்தகமாகிவருகிறது. பங்குச்சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த தொடர்சரிவானது வர்த்தகர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.