மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்றும் சுமார் 55 புள்ளிகள் உயர்ந்து தனது வர்த்தகத்தை தொடங்கியது.
ஏற்றம்- இறக்கம் என மாறி மாறி வர்த்தகமான மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இறுதியில் 187.24 புள்ளிகள் (0.51 விழுக்காடு) உயர்ந்து 36,674.52 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 36 புள்ளிகள் (0.33 விழுக்காடு) உயர்ந்து 10799.65 புள்ளிகளிலும் தங்கள் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்
அதிகபட்சமாக பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்குகள் எட்டு விழுக்காடு வரை உயர்ந்தது. அதேபோல் இண்டஸ்இண்ட் வங்கி, பஜாஜ் பின்சர்வ், இன்போசிஸ், ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ஹெச்.சி.எல் டெக் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன.
மறுபுறம், என்டிபிசி, ஐடிசி, பவர் கிரிட் மற்றும் டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்தன.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள்
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இன்றைய வர்த்தகத்தின்போது சுமார் 348.35 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கினர்.
சர்வதேச பங்குச் சந்தை
ஷாங்காய் பங்குச்சந்தையை தவிர ஹாங்காங், டோக்கியோ, சியோல் ஆகிய பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்தன. ஐரோப்பிய பங்குச் சந்தைகளும் தற்போது இறக்கம் கண்டே வர்த்தகமாகிவருகின்றன.
கச்சா எண்ணெய் விலை
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை 1.02 விழுக்காடு குறைந்து, பேரல் ஒன்று 42.66 அமெரிக்க டாலர்களுக்கு வர்த்தகமாகி வருகிறது.
இந்திய ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 25 பைசா குறைந்து 74.93 ரூபாய்க்கு வர்த்தகமானது.
இதையும் படிங்க: கரோனா ஊரடங்கு - அதிகரிக்கும் டிஜிட்டல் பரிவர்த்தனை