மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று (நவ.23) வர்த்தகமானதைவிட சுமார் 320 புள்ளிகள் உயர்ந்து இன்றைய வர்த்தகத்தைத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து இன்று (நவ.24) நாள் முழுவதும் ஏற்றத்திலேயே வர்த்தகமானது.
கரோனா தொற்றுக்கு ஃபைஸர், மாடர்னா நிறுவனங்களின் கரோனா தடுப்பு மருந்து 95% தடுப்பாற்றலும், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்து 90% தடுப்பாற்றலும் கொண்டுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்தச் செய்திகள் வெளியானதிலிருந்தே இந்தியப் பங்குச்சந்தைகள் பெரிய அளவில் உயர்ந்து வருகிறது.
இன்றைய வர்த்தக நாள் முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 448.87 புள்ளிகள் (1.01 விழுக்காடு) உயர்ந்து 44,601.63 புள்ளிகளிலும், தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 128.70 புள்ளிகள் (1 விழுக்காடு) உயர்ந்து 13,055.15 புள்ளிகளிலும் தங்கள் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்
அதிகபட்சமாக அதானி போர்ட்ஸ் பங்குகள் 4.46 விழுக்காடு உயர்ந்தது. மேலும், ஆக்ஸிஸ் வங்கி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஐஷர் மோட்டார்ஸ், ஹிண்டால்கோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளும் ஏற்றம் கண்டன.
மறுபுறம் டைட்டன், பிசிபிஎல், நெஸ்லே, கெயில் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவைக் கண்டன.
தங்கம், வெள்ளி விலை
சென்னையில் 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 1,120 ரூபாய் குறைந்து 46,400 ரூபாய்க்கு விற்பனையானது. அதேபோல வெள்ளியின் விலை 2,000 ரூபாய் குறைந்து ஒரு கிலோ 60,000 ரூபாய்க்கு விற்பனையானது.
பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 84.64 ரூபாய்க்கும், டீசல் 76.88 ரூபாய்க்கும் விற்பனையானது.
இதையும் படிங்க : நாட்டின் வேலைவாய்ப்பு மீண்டும் எழுச்சி : லிங்க்டு-இன் தகவல்