மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்றைய வர்த்தக நாள் முடிவில் 704.37 புள்ளிகள் (1.68 விழுக்காடு) உயர்ந்து 42,597.43 புள்ளிகளிலும், தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 197.50 புள்ளிகள் (1.61 விழுக்காடு) உயர்ந்து 12,461.05 புள்ளிகளிலும் தங்கள் வர்த்தகத்தை நிறைவுசெய்தன.
இன்றைய வர்த்தகத்தின்போது, ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் முன்னெப்போதும் இல்லாத வகையில் 42,597.43 புள்ளிகளிலும், நிஃப்டி 12,474.05 புள்ளிகளிலும் வர்த்தகமானது.
இதன் மூலம் மும்பை பங்குச்சந்தையில் பட்டியிலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு சுமார் இரண்டு லட்சம் கோடி ரூபாய் உயர்ந்து, 165 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
இது குறித்து ரிலிகேர் புரோக்கிங் லிமிடெட் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் வி.பி. அஜித் மிஸ்ரா கூறுகையில், "இந்தியப் பங்குச்சந்தைகள் மிகவும் வலுவாக தனது வர்த்தகத்தை தொடங்கின. சர்வதேச பங்குச்சந்தைகளைப் போல இந்திய பங்குச்சந்தைகளும் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளன. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதே இந்த உயர்வுக்கு காரணமாகக் கருதப்படுகிறது" என்றார்.
பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள டாப் 30 நிறுவனங்களில் 28 நிறுவனங்களின் பங்குகள் இன்று ஏற்றம் கண்டன. இண்டஸ்இண்ட் வங்கி அதிகபட்சமாக 4.95 விழுக்காடு ஏற்றம் கண்டது. அதைத்தொடர்ந்து, பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, பவர் கிரிட் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்றம் கண்டன. ஐடிசி மற்றும் மாருதி நிறுவனத்தின் பங்குகள் சரிவை எதிர்கொண்டன.
மும்பை பங்குச்சந்தையில் டெலிகாம், வங்கி, பவர், மெட்டல், நிதி, நுகர்வோர் பொருள்கள், டெக் நிறுவனங்கள் ஆகியவற்றின் பங்குகள் 3.81 விழுக்காடு வரை உயர்ந்தன. அதே நேரத்தில் சுகாதார நிறுவனத்தின் பங்குகள் ஓரளவு சரிவைச் சந்தித்தன.
மேலும், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்குகள் 1.01 விழுக்காடு வரை உயர்ந்தன. மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள 1,485 நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன, 1,206 நிறுவனங்களின் பங்குகள் சரிவை எதிர்கொண்டன. அதேநேரம் 191 நிறுவனங்களின் பங்குகளில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.
இதையும் படிங்க: சாம்சங் ஸ்மார்ட்போன்கள் விற்பனை உயர்வு!