இறுதி வர்த்தக நாளான இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 199.32 புள்ளிகள் (0.63 விழுக்காடு) உயர்ந்து 31,642.70 புள்ளிகளிலும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 52.45 புள்ளிகள் (0.57 விழுக்காடு) உயர்ந்து 9,251.50 புள்ளிகளிலும் நிறைவடைந்தன.
ஏற்றம் - இறக்கம் கண்ட பங்குகள்
இந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனத்தின் பங்குகள் அதிகபட்சமாக நான்கு விழுக்காட்டிற்கும் மேல் ஏற்றம் கண்டது. அதைத்தொடர்ந்து நெஸ்லே இந்தியா, டெக் மஹிந்திரா, சன் பார்மா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றமடைந்தன. விஸ்டா நிறுவனத்தின் முதலீடு அறிவிப்பைத் தொடர்ந்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் 3.62 விழுக்காடு உயர்ந்தது.
மறுபுறம் என்.டி.பி.சி., எம் & எம், ஆக்சிஸ் வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி ஆகியவற்றின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.
காரணம் என்ன?
சர்வதேச பங்குச் சந்தைகள் நல்ல நிலையிலிருந்ததாலும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவதாலும் இந்திய பங்குச் சந்தை ஏற்றம் கண்டுள்ளதாக வல்லுநர்கள் கருதுகின்றனர். இதுதவிர பல்வேறு நாடுகளும் ஊரடங்கை நீக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருவதும் பங்குச் சந்தை உயரக் காரணமாகக் கருதப்படுகிறது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள்
இன்றைய வர்த்தகத்தின்போது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சுமார் ரூ.19,056.49 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.
சர்வதேச பங்குச் சந்தை
ஷாங்காய், ஹாங்காங், டோக்கியோ, சியோல் ஆகிய பங்குச் சந்தைகள் ஒரு குறிப்பிடத்தக்க ஏற்றத்தைக் கண்டன. அதேபோல ஐரோப்பியப் பங்குச் சந்தையும் ஏற்றத்திலேயே தனது வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளது.
கச்சா எண்ணெய் விலை
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 1.73 விழுக்காடு அதிகரித்துப் பேரல் ஒன்று 29.97 அமெரிக்க டாலருக்கு வர்த்தகமானது.
இந்திய ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 பைசா உயர்ந்து 75.54 ரூபாய்க்கு வர்த்தகமானது.
இதையும் படிங்க: 'இரண்டு மாசம் சம்பளம் கொடுத்தோம்... இப்போ முடியல' - கைவிரித்த இண்டிகோ