மும்பை பங்குச் சந்தை நேற்றைவிட 500 புள்ளிகள் உயர்ந்து இன்றைய வர்த்தகத்தைத் தொடங்கியது. இருப்பினும் நிதி நிறுவனத்தின் பங்குகளை முதலீட்டாளர்கள் விற்கத் தொடங்கியதால் அதன் பின் பங்குச் சந்தை தொடர்ந்து சரிவடைந்தது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 81.48 புள்ளிகள் (0.26%) குறைந்து 31,561.22 புள்ளிகளிலும் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 12.30 புள்ளிகள் (0.13%) குறைந்து 9,239.20 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன.
ஏற்றம் இறக்கம் கண்ட பங்குகள்
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் பங்குகள் ஐந்து விழுக்காட்டிற்கும் மேல் சரிவடைந்தது. அதேபோல கோட்டக் வங்கி, ஹெச்.யூ.எல், எச்.டி.எஃப்.சி., இண்டஸ்இண்ட் வங்கி, எச்.டி.எஃப்.சி வங்கி, நெஸ்லே இந்தியா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன. மறுபுறம், ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஆட்டோ, மாருதி, டிசிஎஸ், ஹெச்.சி.எல் டெக் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றமடைந்தன.
காரணம் என்ன?
சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளும் ஊரடங்குகளைத் தளர்த்தத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருவதால் இந்திய பங்குச் சந்தை ஏறுமுகத்தில் தனது வர்த்தகத்தைத் தொடங்கியது. இருப்பினும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் பங்குகளைப் பலரும் விற்கத்தொடங்கியதால் இந்திய பங்குச் சந்தை மதியம் முதல் சரிவைச் சந்திக்கத் தொடங்கியது.
சர்வதேச பங்குச் சந்தை
ஹாங்காங், டோக்கியோ ஆகிய பங்குச் சந்தை ஏற்றத்தில் வர்த்தகத்தை நிறைவு செய்தன. இருப்பினும் ஷாங்காய், சியோல் பங்குச் சந்தை இறக்கம் கண்டு வர்த்தகத்தை நிறைவு செய்தன. ஐரோப்பியப் பங்குச் சந்தை சரிவைச் சந்தித்து தற்போது வர்த்தகமாகிவருகிறது.
கச்சா எண்ணெய் விலை
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை 2.39 விழுக்காடு குறைந்து பேரல் ஒன்று 30.23 அமெரிக்க டாலர்களில் வர்த்தகமாகிவருகிறது.
இந்திய ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 19 பைசா குறைந்து 75.73 ரூபாய்க்கு வர்த்தகமாகிவருகிறது.
இதையும் படிங்க: ஐஆர்சிடிசி பங்குகள் உயர காரணம் என்ன?