சென்னையைச் சேர்ந்த ஃபிரெஷ் ஒர்க்ஸ் நிறுவனம், அமெரிக்க பங்குச் சந்தையில் தனது பங்கு மூலதனத்தை (Intial Public Offering (IPO)) வெளியிடுகிறது.
சென்னையைச் சேர்ந்த பிரபல மென்பொருள் சேவை நிறுவனமான ஃபிரெஷ் ஒர்க்ஸ், பன்னாட்டு நிறுவனங்களுடன் தொடர்பில் இருப்பதற்காக டெக் நிறுவனங்களின் புகழிடமான சிலிக்கான் பள்ளத்தாக்குப் பகுதிக்கு தனது அலுவலகத்தை முன்னதாக மாற்றியது.
![ரஜினி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-freshworks-ipo-rajinikanth-girish-mathrubhootham-7208446_28082021111006_2808f_1630129206_275.jpg)
இருப்பினும், சென்னையில் அதிக அளவிலான நபர்களை இந்நிறுவனம் பணியமர்த்தி வருகிறது. சமீப காலத்தில் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்ற ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் ஃபிரெஷ் ஒர்க்ஸ் நிறுவனமும் ஒன்று.
அமெரிக்க சந்தையில் பங்கு மூலதன வெளியீடு
தற்போது இந்நிறுவனம் அமெரிக்காவின் நாஸ்டாக் பங்குச் சந்தையில் 100 மில்லியன் டாலர் (சுமார் 700 கோடி ரூபாய்க்கு) பங்கு மூலதனத்தை வெளியிட உள்ளது. கரோனா பெருந்தொற்று காரணமாக உலகெங்கிலும் டிஜிட்டல் சேவைகளுக்கான தேவை அதிகரித்ததைத் தொடர்ந்து ஃபிரெஷ் ஒர்க்ஸ் நிறுவனத்தின் வருவாய் 40 விழுக்காடு அதிகரித்துள்ளது.
குறிப்பாக மருத்துவம், கல்வி, அரசு சேவைகளில் இந்நிறுவனத்தின் சேவைக்கான பயன்பாடு அதிகரித்துள்ளதன் மூலம் வருவாய் உயர்வு கண்டுள்ளது. இந்நிறுவனத்துக்கு தற்போது 52,500 வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
தீவிர ரஜினி ரசிகரான நிறுவனத்தின் சிஇஓ
இதன் வருவாய் கடந்த ஆறு மாதங்களில் கணிசமான அளவு உயர்ந்துள்ளது. இச்சூழலில் தனது வணிகத்தை மேலும் விரிவுபடுத்த பொதுப் பங்கு வெளியீட்டின் மூலம் நிதி திரட்ட ஃபிரெஷ் ஒர்க்ஸ் முடிவு செய்துள்ளது. ஃபிரெஷ் ஒர்க்ஸ் நிறுவனரும் அதன் தலைமை செயல் அலுவலருமான கிரிஷ் மாத்ருபூதம், தான் ஒரு அதி தீவிரமான ரஜினி ரசிகர் என்பதை பல முறை தொலைக்காட்சி பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.
ரஜினியின் கோச்சடையான், லிங்கா, கபாலி உள்ளிட்ட படங்களுக்கு ஒட்டுமொத்த திரையரங்கையும் புக் செய்து தனது ஊழியர்களைக் காண வைப்பது அவரது வழக்கம். தற்போது 100 மில்லியன் டாலர்கள் மூலதனப் பங்கு வெளியிட்டுக்கு முதலீட்டாளர்களுக்கு அவர் எழுதியுள்ள குறிப்பில் நடிகர் ரஜினிகாந்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
![ரஜினி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-freshworks-ipo-rajinikanth-girish-mathrubhootham-7208446_28082021111006_2808f_1630129206_300.jpg)
பிராஜக்ட் சூப்பர் ஸ்டார்
இந்த பங்கு வெளியீட்டுக்கு ’பிராஜக்ட் சூப்பர் ஸ்டார்’ எனப் பெயர் சூட்டியுள்ள கிரீஷ், இதன்மூலம் ரஜினிகாந்த் மீதான தனது அன்பையும், நன்றியையும் வெளிப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், நடிகர் ரஜினிகாந்தை தனது மானசீக குரு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வெற்றிகரமான நடிகராகவும், கோடிக்கணக்கான மக்களால் நேசிக்கப்படும், கொண்டாடப்படும் நபராகவும் இருந்துள்ள நடிகர் ரஜினிகாந்த் மிக எளிமையான நபராக விளங்குவதாகவும் கிரீஷ் மாத்ருபூதம் தனது பங்கு வெளியீட்டு ஆவணங்களில் பாராட்டியுள்ளார்.
இதையும் படிங்க: பெருந்தொற்றுக்கு பின் சென்னையில் ஸ்டார்ட்அப் சூழல் எப்படி இருக்கிறது?