கரூர்: காமராஜர் மலர் சந்தை அருகே இயங்கி வரும் மாரியம்மன் பூ கடையில் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து விற்பனையானது.
இன்று, ரோஜாப் பூ கிலோ 400 (நேற்றைய விலை - ரூ. 200), மல்லிகை பூ மொட்டுக் கிலோ 3 ஆயிரம் ரூபாய்க்கும், சம்பங்கி கிலோ 300 ரூபாய்க்கும், அரளி கிலோ ரூ. 300க்கும், விரச்சி பூ கிலோ ரூ.200க்கும், செவ்வந்தி பூ கிலோ 250 ரூபாய்க்கும் விற்பனையானது.
சில்லறை வியாபாரிகளிடம் மல்லிகை பூ ரூ.150 முதல் ரூ.250 வரை விற்பனையாகக் கூடும் எனத் தெரிகிறது. அதேபோல ரோசாப்பூக்கள் சில்லறை விற்பனையில் ஒரு ரோசாப்பூ நூறு முதல் 200 ரூபாய்க்கு வரை விற்கப்படும் எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல மல்லிகை பூ சாதாரண நாட்களில் 50 ரூபாய் முதல் 80 ரூபாய் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. பூக்களின் வரத்து மிகக் குறைவாக இருந்ததும் விலை ஏற்றத்திற்கான காரணமாகக் கரூர் காந்தி கிராமம் பூக்கடை வியாபாரி நவீன்ராஜ் தெரிவித்தார்.