மும்பை: வாரத்தின் முதல் நாளானா இன்று பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை ஏறு முகத்தில் உள்ளன. காலை 9.18 மணி நேர நிலவரப்படி, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 536.16 புள்ளிகள் அதாவது 1.28 விழுக்காடு உயர்ந்து 42,273.97 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 153.55 புள்ளிகள் அதாவது 1.25 விழுக்காடு உயர்ந்து 12,417.10 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.
பண்டிகை காலத்துடன் இணைந்து அமெரிக்க தேர்தல் முடிவுகளும் வெளிவந்துள்ளதால் வரும் வாரங்களில் இந்திய பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தை எட்டக்கூடும் என்று பங்குச் சந்தை நிபுணர் ஒருவர் சமீபத்தில் ஈடிவி பாரத்திடம் தெரிவித்திருந்தார்.
முதலீட்டு மேலாண்மை நிறுவனமான என்விஷன் கேபிடல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலரும், நிர்வாக இயக்குநருமான நிலேஷ் ஷா கூறுகையில், "ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அமெரிக்காவின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற நம்பிக்கையை பங்குச் சந்தைகள் ஏற்கனவே பெறத் தொடங்கிவிட்டன. இதன் காரணமாக பங்குச் சந்தைகளும் சாதகமான வளர்ச்சியை எட்டியுள்ளன.
தற்போது டாலர் பலவீனம் அடைய வாய்ப்புள்ளதாலும், இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளின் சந்தைகளுக்கு இந்த முடிவு சாதகமானதாகவே அமையும்" எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்திய ரூபாயின் வீழ்ச்சி - நீங்கள் நினைப்பதை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்!