கரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து இந்தியாவில் எரிபொருள் விலை தொடர்ந்து உயர்ந்துவருகிறது.
இந்நிலையில், தேசிய தலைநகர் பகுதியில் இன்று (திங்கள்கிழமை) டீசல் விலை 12 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லியில் ஒரு லிட்டர் டீசலின் விலை 81.52 ரூபாயில் இருந்து 81.64 ரூபாயாக உயர்ந்துள்ளது.
அதே சமயம் கடந்த ஜூன் 29ஆம் தேதி ஐந்து பைசா உயர்த்தப்பட்ட பெட்ரோலின் விலை அதன்பின் உயர்த்தப்படவில்லை. இதன் காரணமாக டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 80.43 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதன் மூலம் பெட்ரோலின் விலையைவிட டீசல் சுமார் ஒரு ரூபாய்வரை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இது தனிப்பட்ட போக்குவரத்து வாகனங்களை வைத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி என்றாலும் சரக்கு மற்றும் பொதுப்போக்குவரத்து துறையில் இருப்பவர்கள் இதனால் பெரும் இன்னலை எதிர்கொண்டுள்ளனர்.
ஏனென்றால், இந்தியாவில் தனிப்பட்ட போக்குவரத்து வாகனங்கள் பெட்ரோலில் இயங்கும் வகையிலும், சரக்கு மற்றும் பொதுப்போக்குவரத்து வாகனங்கள் டீசலில் இயங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த, ஏப்ரல் மாதம் உலகின் பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் எரிபொருளின் தேவை பெரும் வீழ்ச்சியை சந்தித்தது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சியைச் சந்தித்ததால், இந்தியாவில் மார்ச் 16ஆம் தேதிமுதல் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு நிறுத்திவைக்கப்பட்டது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது, உள்ளூர் சந்தையில் எரிபொருள்கள் விலை குறைப்பு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், தற்போது சர்வதேச சந்தையை காரணம்காட்டி எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இண்டிகோ நிறுவனத்தில் 10 விழுக்காடு ஆள்குறைப்பு!