’நைட் பிராங்க்’ என்ற ரியல் எஸ்டேட் ஆலோசனை மையம் உலகின் ஆடம்பரமான குடியிருப்புகளைக் கொண்ட நகரங்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், தேசியத் தலைநகர் டெல்லி 27ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ஆடம்பரமான குடியிருப்புகளின் விலை ஏற்றத்தின் அடிப்படையில் வெளியான இந்தப் பட்டியலில், மும்பை 33ஆவது இடத்தையும், பெங்களூரு 34ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.
நியூசிலாந்து நாட்டில் உள்ள ஆக்லாந்து முதலாம் இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஆக்லாந்து நகரில் உள்ள குடியிருப்புகளின் விலை 12.9 விழுக்காடு உயர்ந்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரான மணிலா 10.2 விழுக்காடு விலை ஏற்றத்துடன் இரண்டாம் இடத்கதையும், சீன நாட்டில் உள்ள ஷென்சென் 8.9 விழுக்காடு விலை ஏற்றத்துடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.
இதுகுறித்து நைட் பிராங்க் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மும்பை, பெங்களூரு ஆகிய நகரங்களைவிட டெல்லியில் உள்ள குடியிருப்புகளின் விலை ஏற்றம் கண்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டை ஒப்பிடுகையில், டெல்லியில் உள்ள குடியிருப்புப் பகுதிகளின் விலை 0.2 விழுக்காடு அதிகரித்துள்ளது. இருப்பினும், இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டை ஒப்பிடுகையில் 0.1 விழுக்காடு விலை குறைந்துள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து நைட் பிராங்க் ரியல் எஸ்டேட் ஆலோசனை மையத்தின் இந்தியத் தலைவர் ஷிசிர் பைஜால் கூறுகையில், "கரோனா ஊரடங்குக்குப் பிறகான காலத்தில் குடியிருப்புகளின் விலையில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில காலாண்டுகளில் விலையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், ரியல் எஸ்டேட் துறையின் முதலீடுகள் அதிகரித்துள்ளது" என்றார்.