1984ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆட்சியில் இருக்கும் கட்சியே மீண்டும் பெரும்பான்மை பலத்தோடு ஆட்சி அமைப்பது இதுவே முதன்முறையாகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினரை திருப்திப்படுத்தும் வகையில் 2019-20ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த பட்ஜெட் அனைவரையும் ஏமாற்றும் விதமாக இருக்கிறது என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்த 45 ஆண்டுகளில் வேலைவாய்ப்பின்மை 8.1 விழுக்காடு அதிகரித்துள்ளதாக சி.எம்.ஐ.இ (Centre for Monitoring Indian Economy) அமைப்பு அறிக்கை வெளியிட்டது. அதாவது நாட்டில் உள்ள 68 விழுக்காடு மக்கள் வேலையில்லாமல் இருக்கின்றனர் என்ற அதிர்ச்சி தரும் தகவலை அது வெளியிட்டது. இப்படியிருக்க வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வேலைவாய்ப்பின்மை சிக்கலை தீர்ப்பது குறித்த ஒரு அறிவிப்பு கூட இந்த பட்ஜெட்டில் இல்லை. இது பெரும் ஏமாற்றமாக பார்க்கப்படுகிறது.
விவசாயப் பொருட்களின் ஆதார விலை மிகக்குறைவாக உள்ளதாகவும், விவசாய உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதி குறைந்து வருவதும் விவசாயத்துறை தற்போது சந்தித்து வரும் பெரிய பிரச்னையாக உள்ளன. இவற்றை தீர்க்க உற்பத்தி செய்யப்படும் பல பொருள்களின் ஆதார விலை உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுகுறித்த அறவிப்பு வெளியிடாதது விவசாயிகளை ஏமாற்றமடைய செய்துள்ளது.