மும்பை : இந்தியாவின் நைட்டிங்கேல், தேசத்தின் மகள், மெல்லிசை பாடல்களின் மகாராணி என வர்ணிக்கப்பட்ட பாரத ரத்னா லதா மங்கேஷ்கர் பிப்.6ஆம் தேதி காலமானார்.
அவரது மறைவையொட்டி மத்திய அரசு 2 நாள்கள் துக்கம் அனுசரித்துள்ளது. இதையடுத்து தேசிய கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மகாராஷ்டிரா மாநில அரசு ஒருநாள் பொதுவிடுமுறை அளித்துள்ளது. இதையடுத்து இன்று (பிப்.7) நடைபெறவிருந்த பணவியல் கொள்கை குழு (Monetary Policy Committee (MPC) கூட்டம் ஒருநாள் ஒத்திவைக்கப்பட்டது.
இந்தக் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) வழக்கம்போல் தொடங்குகிறது. நாட்டின் வரவு செலவு திட்ட நிதிநிலை அறிக்கை பிப்.1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் தொடங்கும் முதல் கூட்டம் என்பதால் இந்தக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம்.
நிதி சார்ந்த சில கொள்கை முடிவுகளும் மாற்றப்படலாம் எனப் பொருளாதார அறிஞர்கள் கணித்துள்ளனர். ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை கமிட்டி கூட்டம் பிப்.8ஆம் தேதி தொடங்கி பிப்.10ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறுகிறது.
முதுபெரும் பாடகி லதா மங்கேஷ்கர் தனது 92 வயதில் காலமானார். அவர் வயது முதிர்வு, கரோனா பெருந்தொற்று பாதிப்பு, நிமோனியா பாதிப்பு என கடந்த ஒரு மாத காலமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் அவரது உடலில் பல்வேறு உறுப்புகள் செயலிழந்ததால் பிப்.6ஆம் தேதி காலை காலமானார்.
இதையும் படிங்க : 2023இல் டிஜிட்டல் கரன்சி அறிமுகம்- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்