கரோனா காரணமாக நாட்டில் பொருளாதார நடவடிக்கைகள் முடங்கியுள்ள நிலையில், வர்த்தக நடவடிக்கையை ஊக்குவிக்கும்விதமாக ரெப்போ வட்டி விகிதத்தை 4.4 விழுக்காட்டிலிருந்து 4 விழுக்காடாக ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால் வீட்டுக்கடன், வாகனக்கடன் ஆகியவற்றின் மீதான வட்டி குறைய வாய்ப்புள்ளது. அத்துடன் வீடு, வாகன கடன்களுக்கான இ.எம்.ஐ. கடன் தவணை செலுத்துவதற்கான காலக்கெடுவை ரிசர்வ் வங்கி மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.
வட்டிக்குறைப்பை அறிவித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலவரம் குறித்து விரிவாகப் பேசினார். அவர் பேச்சின் முக்கிய அம்சங்கள்:
உலகப் பொருளாதாரம் மந்தநிலையை நோக்கிச் செல்கிறது. உலகப் பொருளாதாரம் 13-32 விழுக்காடு சரிவைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியப் பொருளாதாரத்திற்கு முக்கியப் பங்காற்றும் மாநிலங்கள், நகரங்களில்தான் கரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. நாட்டின் உற்பத்தி 17 விழுக்காடு சரிவைச் சந்தித்துள்ளது.
பல்வேறு துறைகளில் தேவைகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது கவலை அளிப்பதாக உள்ளது. நாட்டின் உணவு தானிய உற்பத்தி 3.7 விழுக்காடு அதிகரித்துள்ளது. உணவு தானியங்களின் விலை அதிகரித்துவருவது கவலை அளிக்கும் நிலையில், விரைவில் பணவீக்கம் கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 'குடிபெயர் தொழிலாளர்களுக்கு தானியம் மட்டுமல்ல, பணமும் தேவை'