கரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக இந்தியாவில் வரும் ஏப்ரல் 15ஆம் தேதிவரை நாடு முழுவதும் லாக் டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாட்டில் அத்தியாவசிய செயல்பாடுகள் மட்டுமே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒட்டுமொத்த தொழில்களும் முடங்கியுள்ளன.
இதன் காரணமாக பெரும் பாதிப்பிற்குள்ளான தினக்கூலிகள், சிறு, குறு வணிகர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள், அடிதட்டு மக்கள், ஆகியோர் நலன் காக்கும் விதமாக முதற்கட்ட அவசரநிதியாக 1.7 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று காலை 10 மணியளவில் செய்தியாளர்களை சந்திப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் வங்கித்துறை செயல்பாடு, கடன் வட்டித் தொகை, பணப்புழக்கம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் அடுத்த சில மாதங்களுக்கு சிக்கலின்றி நடைபெறுவது குறித்து ரிசர்வ் வங்கி முக்கிய செயல்திட்டங்களை மேற்கொண்டுவருகிறது. இந்த செயல்திட்டங்களின் முக்கிய அம்சங்களை இன்று அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த செய்தியாளர் சந்திப்பில், வட்டிக்குறைப்பு, இ.எம்.ஐ, வங்கிக் கடன் ஆகியவை குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என பொருளாதார நிபுணர்கள் சார்பில் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அவசர நிதி ரூ.1.7 லட்சம் கோடி: 80 கோடி ஏழைகளின் வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதம்