அனைத்து நாணயங்களும் பணபரிமாற்றத்தின் போது பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என அனைத்து வங்கிகளையும் அறிவுறுத்தியுள்ள ரிசர்வ் வங்கி, நாணயங்களை வாங்க மறுக்கும் வங்கிகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. பல்வேறு காலக்கட்டங்களில் பல வடிவங்களில் புதுப்புது ரூபாய் நாணயங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. பொருளாதாரம், சமூகம், கலாசாரம் உள்ளிட்டவை மைய கருத்தாகக் கொண்டு இந்த நாயணங்களின் வடிவங்கள் வடிவமைக்கப்படுகின்றன. தற்போது 50 பைசா, ஒன்று, இரண்டு, ஐந்து, பத்து ஆகிய ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன.
ஆனால் பத்து ரூபாய், 50 பைசா உள்ளிட்ட சில ரூபாய் நாணயங்கள் செல்லாது எனக்கூறி சில கடைக்காரர்கள், வணிகர்கள், வங்கிகள், போக்குவரத்து பணியாளர்கள் இவற்றை வாங்க மறுத்ததாக ஆர்பிஐக்கு புகார் வந்தது. இதையடுத்து ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், சில நாணயங்கள் செல்லாது என பரப்பப்படும் வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். அனைத்து ரூபாய் நாணயங்களும் செல்லக்கூடியவையே. அதனால் அனைத்து வங்கி கிளைகளும் ரூபாய் நாணயங்களை பண பரிவர்த்தனையின் போது பெற்றுக்கொள்ள வேண்டும்.
பொதுமக்கள் எவ்வித தயக்கமும் இன்றி பணபரிவர்த்தனைக்கு சில்லறை நாணயங்களை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வங்கி கிளைகள் நாணயங்களைப் பெறுகின்றனவா என்பதை கண்காணிக்க மண்டல மேலாளர்கள் வங்கி கிளைக்குச் சென்று அதிரடியாக கண்காணிக்க வேண்டும். நாணயங்கள் பெறப்படவில்லை என்றால் தலைமை அலுவலகத்திற்கு புகார் தெரிவிக்க வேண்டும். ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்களை மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.