மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சியை நேரடியாக விமர்சிக்க பலரும் தயக்கம் காட்டிவரும் நிலையில், பஜாஜ் குழுமத் தலைவர் ராகுல் பஜாஜ், தற்போது நேரடியாக விமர்சனக் கணைகளைத் தொடுத்துள்ளார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் பங்கேற்றனர். இந்த விழாவில் பஜாஜ் குழுமத் தலைவர் கலந்துகொண்டு அமைச்சர்களிடம் சில அதிரடி கேள்விகளை முன்வைத்தார்.
நாட்டின் பொருளாதாரம் மந்த நிலை காரணமாக 4.5 விழுக்காடு குறைந்துள்ள நிலையில், இதுகுறித்து விமர்சனக் கருத்தை பஜாஜ் நேரடியாக முன்வைத்தார்.
மத்திய அரசை யாரும் விமர்சிக்கக் கூடாது என நினைக்கிறீர்களா என அமித் ஷாவிடம் நேரடியாக கேட்ட பஜாஜ், மக்கள் மத்தியில் அச்ச உணர்வை அரசு விதைப்பதாக குற்றம்சாட்டினார். இதற்குப் பதலளித்த அமித்ஷா எந்த ஒரு தனிநபரும் இங்கு பயப்படத் தேவையில்லை என்றார்.
பாஜக மக்களவை உறுப்பினர் பிரக்யாசிங் தாகூர் கோட்சேவை தேசபக்தன் என்று குறிப்பிட்ட கருத்து குறித்து கேள்வி எழுப்பிய பஜாஜ், கோட்சே தீவிரவாதி என்பதில் சந்தேகம் உள்ளதா என அமித்ஷாவை மடக்கினார். அதற்கு, கட்சி பிரக்யாசிங் தாகூர் கருத்தை வன்மையாக கண்டித்ததாகப் பதிலளித்தார் அமித்ஷா.
மோடி தலைமையிலான அரசை பொதுவெளியில் நேரடியாக விமர்சிக்க பெரும்பாலானோர் தயங்கி வரும் நிலையில், நாட்டின் முன்னணி நிறுவனத்தின் தொழிலதிபர் இவ்வாறு விமர்சித்துள்ளது பேசுபொருளாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: குடியுரிமை திருத்த மசோதா: முதலமைச்சர்களைச் சந்தித்த உள்துறை அமைச்சர்!