சென்னை: ஹிந்துஸ்தான் தொழில் கூட்டமைப்பின் ஆண்டு விழாவில் மத்திய ரயில்வே, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் காணொலி வாயிலாக கலந்துகொண்டு பொருளாதார வளர்ச்சியில் தொழில்துறை கூட்டமைப்பின் பங்கு குறித்தும், தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் குறித்தும் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், “தொழில்துறை கூட்டமைப்பு அரசுக்கும், தொழில் துறைக்கும் இடையே பாலமாக செயல்படுகிறது. உலகம் கரோனாவுக்கு எதிரான இந்தியாவின் யுத்தத்தையும், நமது மீட்சியையும் பார்த்து வருகிறது.
தொடக்கத்தில் நமது மருத்துவ உள்கட்டமைப்பு வசதி, மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவை மிகவும் குறைவாக இருந்தது. ஆறு மாத ஊரடங்குக்குப் பிறகு இந்திய தொழில்துறை மருத்துவ உபகரணங்கள், முகக்கவசம், செயற்கை சுவாசக் கருவி, மருந்துகளை உற்பத்தி செய்வதில் தன்னிறைவு அடைவது மட்டுமல்லாமல் பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்துவருகிறது.
ரிலையன்ஸ் நிறுவனத்தில் குவியும் முதலீடு
கரோனாவுக்குப் பிறகு, உற்பத்திச் சங்கிலியில் உலகம் இந்தியாவை நம்பகமான பங்குதாரராக பார்க்கிறது. இதனால் வேலைவாய்ப்புகள் அதிகரித்து, அந்நிய செலாவணி அதிகரிக்கும். மிகவும் கடினமான காலத்திலும் சரியான பணியாற்றியதால் உலக நிறுவனங்கள் இந்தியாவை நம்புகின்றன.
2019ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏற்றுமதி 5 விழுக்காடு அதிகரித்துள்ளது. ரயிலில் சரக்கு கொண்டு செல்லப்படுவது 2019ஐ விட 15 விழுக்காடு அதிகரித்து 100 மில்லியன் டன்களாக உயர்ந்துள்ளது.
ஜிஎஸ்டி வசூல் கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தைவிட 4 விழுக்காடு அதிகரித்துள்ளது. பொருளாதார மீட்சி வேகமாக நடைபெற்றுவருகிறது. மேலும், அது ‘வி’ வடிவத்தில் இருக்கும். இதனால் நம்மால் உயர் வளர்ச்சி இலக்கை அடைய முடியும். சுற்றுலா, பொழுதுபோக்கு, விமான போக்குவரத்து துறைகளில் மந்த நிலை நீடிக்கிறது.
சில துறைகளுக்கு கூடுதல் ஆதரவு தேவைப்படுகிறது. அரசு அனைத்து துறைகளின் மீட்சிக்கு உதவ தயாராக உள்ளது.
மடைதிறந்து வரும் முதலீடுகள் - ரிலையன்ஸ் நிறுவனத்தின் பொற்காலம்!
நாட்டின் மூலை முடுக்கில் உள்ள ரயில் நிலையங்களில் கூட இன்று இணைய வசதியுள்ளது. ரயில்வே இணையதளத்தின் வேகம் தனியார் சேவைகளைவிட வேகமாக உள்ளது. முன்பு மணிக்கு 23 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்ட சரக்கு ரயில்கள் தற்போது 50 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படுகின்றன.
இதனால் நிறுவனங்களின் லாபம் அதிகரித்துள்ளது. எளிதில் கெட்டுப்போகும் பொருள்களும் ரயிலில் கொண்டு செல்லப்படுகிறது. விவசாயிகளுக்கான சிறப்பு கிசான் ரயில்கள் இயக்கப்படுகின்றன. சரக்கு ரயில் போக்குவரத்து 15 விழுக்காடு அதிகரித்துள்ளது.
தொழில்துறையை ஊக்குவிக்கும் வகையில் தொழிலாளர் சட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது; அதே நேரத்தில் தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில், இல.கணேசன், ஹிந்துஸ்தான் தொழில் கூட்டமைப்பின் தலைவர் சத்திய நாராயண தவே, முன்னாள் தலைவர் பி.ஜி.சத்குரு தாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.