சிக்கலில் வங்கித்துறை
கரோனா பெருந்தொற்றால் பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளும் பாதித்திருந்தாலும், மிகப்பெரிய அளவில் பாதிப்பைச் சந்தித்தது வங்கித்துறைதான். பொதுமுடக்கத்தால் கோடிக்கணக்கான மக்கள் வேலையிழந்து, தொழில்துறையினர் வருவாய் இழந்து தவித்து வருகின்றனர். இதனால், அவர்கள் வங்கிகளிலிருந்து பெற்ற கடனை திரும்ப செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடன் சலுகைகள்
மத்திய அரசு பொருளாதார பாதிப்பை சந்தித்தவர்களுக்கு கடனைத் திரும்பச் செலுத்துவதற்கு கால அவகாசம், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், எதிர்பாராத சிக்கலை சந்தித்த தொழித்துறையினர், நிறுவனங்களுக்கு கூடுதல் கடன் வசதி, நிதி வசதிகள் ஆகிய திட்டங்களை அறிவித்தது. அது பயனாளர்களுக்கு உதவினாலும் வங்கிகளின் நிதி நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது.
வாராக்கடன் பிரச்சனை
இந்திய பட்டியலிடப்பட்ட வர்த்தக வங்கிகளின் வாராக்கடன், கடந்த மார்ச் மாதத்தில் 8.5% ஆக இருந்த நிலையில், இந்தாண்டு மார்ச் மாதத்தில் 12.5% ஆக உயரும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. மேலும், பொருளாதார சூழ்நிலை மிகவும் மோசமாக இருந்தால், வாராக்கடன் 14.7% வரை அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மோசமான வங்கி
வாராக்கடன் பிரச்சனையிலிருந்து வங்கிகளை மீட்க, பேட் பேங்க் (Bad bank) உருவாக்கலாம் என்ற யோசனை அண்மைக்காலமாகவே பரிந்துரைக்கப்படுகிறது. அதாவது வங்கிகளின் கடன்களை பெற்றுக்கொள்வதற்காகவே பிரத்யேக வங்கியை உருவாக்கி, அதன் மூலம் முடிந்தவரை கடன்களை மீட்கும் யுத்திதான் பேட் பேங்க். இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் வாதிட்டு வருகின்றனர்.
மோசமான திட்டம்?
இது தொடர்பாக நம்மிடம் பேசிய வங்கித்துறை நிபுணர் விக்ரம் விஜயராகவன், "இது மோசமான திட்டமாக அமையலாம். பொதுவாக இதுபோன்று வாராக்கடன்கள் அதிகரித்தால், கடனை மறுசீரமைப்பு செய்து, வட்டி, மூலத்தொகையில் சில சலுகைகளை வழங்கி கடனைத் திரும்பப் பெறுவர். தற்போது வாராக்கடன் அதிகளவில் இருப்பதால் பேட் பேங்க் முறை முன்வைக்கப்படுகிறது. வெளிநாடுகளில் பிரபலமான இம்முறை இந்தியாவில் எந்தளவுக்கு சாத்தியம் என்று தற்போது கூற முடியாது.
இந்திய நிறுவனங்களை அபகரிக்கும் திட்டம்
பேட் பேங்க் உருவாக்கி, அவற்றின் மூலம் கடன்களை மூலதனமாக மாற்றுவர். வாராக்கடன்களை அந்நிய முதலீட்டாளர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாங்கிக் கொள்வர். இதனால் வங்கிகளின் கணக்கு புத்தகங்களில் வாராக்கடன் இல்லாதது போல காண்பிக்கலாம். இது அரசுக்கு நிம்மதி அளிக்கும். பின்னர், அந்நிய நிறுவனங்கள் மிகக் குறைந்த விலைக்கு இந்திய நிறுவனங்களை வாங்க வாய்ப்பு உள்ளது. சில நேரங்களில் இங்குள்ள நிறுவனங்களே, வெளிநாட்டு நிறுவனங்களின் பெயரில் குறைந்த மதிப்பில் நிறுவனங்களை கைப்பற்றலாம். இதற்காகவே பலரும் இந்த திட்டத்தை ஆதரிக்கின்றனர். இத்திட்டத்தை பகுதியளவு அமல்படுத்தலாம்" என்று கூறினார்.
இதையும் படிங்க: விரைவில் 5ஜி சேவை - மத்திய அமைச்சர் ரவிசங்கர் உறுதி!