'ஒரு தேசம், ஒரே ஆதார விலை, நேரடி பணப்பரிமாற்றம்' என்றால் என்ன?
2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் வகையிலும், இடைத் தரகர்கள் எவரும் இன்றி நேரடியாக விவசாயிகளின் கணக்குகளுக்கு வைப்புத் தொகை செலுத்தும் வகையிலும், மத்திய அரசு நாடு முழுவதும் 'ஒரு தேசம், ஒரே ஆதார விலை, நேரடி பணப்பரிமாற்றம்' (One Nation, One MSP, One DBT) திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
வேளாண் திருத்த சட்டங்களின் முக்கிய அம்சங்களில் ஒன்றான இந்தத் திட்டம், தற்போது விவசாயிகளுக்கு பெரும் நன்மை பயத்துள்ளதாக நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் (Consumer Affairs, Food and Public Distribution) தெரிவித்துள்ளது.
நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு பணம்
விவசாயிகளின் கணக்குகளுக்கு நேரடியாக வைப்புத் தொகை (டிபிடி) வந்து சேரும் இந்தத் திட்டத்தின் மூலம், குறைந்தபட்ச ஆதரவு விலையில் (எம்எஸ்பி) பயிர்களை வாங்குவதற்காக பெறப்பட்ட தொகை, விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படுகிறது.
மேலும், இந்த முயற்சியால் ஹரியானா, பஞ்சாப் விவசாயிகளும் பயனடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் குறுவை சாகுபடி அல்லது ராபி பருவ சந்தைப்படுத்தல் காலத்தில் இதுவரை 41.8 லட்சம் மெட்ரிக் டன்கள் கோதுமை குறைந்தபட்ச ஆதார விலையில் வாங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மொத்தம் 202.69 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு வைப்புத் தொகை அனுப்பப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலனடைந்துள்ள மாநிலங்கள்
ஹரியானாவில் இதுவரை 44 லட்சம் டன்கள் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டு, ஆயிரத்து 214 கோடி ரூபாய் வரை விவசாயிகளின் கணக்குகளில் சென்று சேர்ந்துள்ளது. இந்த இரண்டு மாநிலங்களைத் தவிர, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், சண்டிகர் மற்றும் பிற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உடனடி நடவடிக்கைகள் அடிப்படையில் கொள்முதல் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
இந்திய உணவுக் கழகம் (எஃப்சிஐ) இதுவரை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 121.7 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையை வாங்கியுள்ளது. 2021-22ஆம் ஆண்டு குறுவை சாகுபடி பருவத்தில் இதுவரை 11.6 லட்சம் கோதுமை விவசாயிகள் பயனடைந்துள்ளனர். மேலும், 24 ஆயிரத்து 37.56 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விவசாயியின் கடன் தகுதி அதிகரிக்குமா?