அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றபின் அமெரிக்கா-சீனா ஆகிய நாடுகளுக்கிடையே மறைமுக வர்த்தகப்போர் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே, அமெரிக்காவுக்கே முதல் முன்னுரிமை உள்ளிட்ட கோஷங்களைத் தொடர்ச்சியாக ட்ரம்ப் முன்வைத்து வருகிறார்.
இதன் காரணமாக, கட்டுக்கடங்காத சந்தையை உருவாக்கி வைத்திருக்கும் சீனாவை தனது கட்டுக்குள் வைக்கவேண்டும் என ட்ரம்ப் தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார்.
இதன் காரணமாக இரு நாடுகளுக்கிடையே மறைமுக வர்த்தகப்போர் மூண்டது. இரு பெரும் சக்திகளுக்கிடையே ஏற்பட்டுள்ள இந்த போட்டியால் உலகப் பொருளாதாரமே பெரும் ஆட்டம் காணும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக முன்னணி பொருளாதார ஆய்வு நிறுவனமான மார்கன் ஸ்டான்லி எச்சரித்துள்ளது.
அடுத்த ஓராண்டுக்குள் இந்த நிலை சீராகாவிட்டால் 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட உலகப் பொருளாதார சரிவைப் போல் மீண்டும் நிகழ வாய்ப்புள்ளதாக மார்கன் ஸ்டான்லி நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், பிரெக்ஸிட் ஒப்பந்த சர்ச்சையாலும் ஐரோப்பாவில் பொருளாதார ஸ்திரத்தன்மையானது கேள்விக்குறியாகியுள்ளது கவனிக்கத்தக்கது.