கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மே மூன்றாம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தாலும் இனி வரும் நாள்களில் அது மேலும் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநேரத்தில் தொழில்களை நிறுத்தி, போக்குவரத்தை முடக்கி, பொருளாதாரத்தை விட மக்களின் உயிரே முக்கியம் என்ற அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்துள்ளன.
ஆனால் ஊரடங்கு உத்தரவால் ஏற்படும் பொருளாதார பாதிப்பு என்பது வெறும் பொருளாதார நெருக்கடியாக இல்லாமல், பலரின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கி உள்ளது. இதனால் அதிகம் பாதிக்ககப்பட்ட துறைகளில் ஒன்று சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்.
இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை மற்றும் உலக பொருளாதார சூழல் ஆகிவயைக் காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்த சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், தற்போது கரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் மிக மோசமான பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. நாட்டில் சுமார் 45% மக்களுக்கு வேலைவாய்ப்பு தரும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டால் நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து பொருளாதார பாதிப்பை மேலும் மோசமாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இதன் களநிலவரம் மற்றும் பாதிப்புகள் குறித்து துறை சார்ந்தவர்களிடம் ஈடிவி பாரத் தொடர்பு கொண்டு பேசியது.
பாஷா, கிண்டி தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்க தலைவர்:
சிறு குறு நிறுவனங்கள் சந்தித்துவரும் பிரச்சினை தொடர்பாக கிண்டி தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்க தலைவர் பாஷா ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்துடன் பேசுகையில், "சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஏற்கனவே 50 சதவீத கொள்ளளவை பயன்படுத்தி உற்பத்தி செய்து வந்தன. கடந்த ஆறு மாதங்களாகவே நாங்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறோம். குறிப்பாக ஆட்டோமொபைல் துறை மந்த நிலையை சந்தித்த பிறகு சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதனை நம்பியுள்ள ஏராளமான உதிரிபாக தயாரிக்கும் சிறு, குறு நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளன.
விற்பனையில் குறைவு காரணமாக பல்வேறு முன்னணி நிறுவனங்களும் உற்பத்தியை குறைத்து வருகின்றன. இதனால் உதிரிபாக நிறுவனங்களுக்கு வேலையில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உற்பத்தி ஆலைகள் இயங்க அரசு அனுமதி கொடுத்தாலும் அவை எந்த அளவுக்கு உற்பத்தியை தொடங்கும் என்று உறுதியாக கூறமுடியாது. ஏனென்றால் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை ஆகாமல் தேக்கம் அடைந்துள்ளன. இதன் தாக்கம் சிறு குறு நிறுவனங்கள் மீதும் ஏற்பட்டுள்ளது.
அசோக் லேலாண்ட், டிவிஎஸ், ஹூண்டாய், ஃபோர்ட் உள்ளிட்ட முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு தாங்கள் கொடுக்க வேண்டிய பணத்தை 100லிருந்து 120 நாள்கள் கழித்துதான் கொடுக்கிறார்கள். பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களும் நீண்ட நாள்களுக்குப் பிறகுதான் பொருள்களுக்கான பணத்தை கொடுக்கிறார்கள்.
பெரும்பாலான நிறுவனங்கள் தேவை ஏற்படும்போது உடனடியாக உதிரிபாகங்களை வாங்கும் ஜீரோ இன்வெண்டரி முறையை கடைப்பிடிக்கிறார்கள். ஒரு பெரிய நிறுவனம், உதிரி பாகம் தயாரிக்கும் பணியை முதற்கட்டமாக ஒரு நடுத்தர நிறுவனத்திடம் வழங்குகிறது. அவர்கள் அதனை மற்றொரு நிறுவனத்திற்கும், அந்த நிறுவனம் அதனை வேறொரு நிறுவனத்திற்கும் கான்ட்ராக்ட் ஆக வழங்குகிறார்கள். இவ்வாறாக சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு மூன்று அடுக்குகளில் பணிகள் வழங்கப்படுகிறன
இதில் முதற்கட்ட நிறுவனம் பணத்தை கொடுப்பதற்கு 40 முதல் 60 நாள்கள் வரை ஆகிறது. அதனிடமிருந்து இரண்டாம் கட்ட உற்பத்தி நிறுவனங்கள் பணத்தை பெற 90 நாள்கள் ஆகிறது. இந்த நிறுவனங்களுக்கு உற்பத்தி செய்து கொடுக்கும் மூன்றாம் கட்ட சிறு, குறு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புக்கான பணத்தை பெறுவதற்கு 150 நாள்களுக்கு மேலாகிறது. மிக சிறிய அளவில் இயங்கும் சிறு குறு நிறுவனங்கள் போதிய நிதி ஆதாரமும் இல்லாமல் புதிதாக கடன் வசதியும் பெறமுடியாமல், புதிய பணிகளும் இல்லாமல் நலிவடைந்து வருகின்றன" என்று கூறினார்.
முருகேசன், பொறியியல் உபகரணங்கள் தயாரிப்பாளர்:
"நாங்கள் நிறுவனத்தை முற்றிலுமாக மூடி உள்ளோம், ஆனால் ஊழியர்களை பட்டினி போடவில்லை" என்றார் சென்னையில் பொறியியல் உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தும் முருகேசன். இது தொடர்பாக பேசிய அவர், " தற்போது ஊரடங்கு உத்தரவால் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் எங்களிடம் பணியாற்றும் வடமாநில கூலித் தொழிலாளர்களுக்கு மூன்றுவேளை உணவளித்து அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய வசதிகளை செய்து கொடுத்து வருகிறோம். மத்திய அரசு பணியாளர்களை வேலையில் இருந்து நீக்க வேண்டாம் அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் எங்கள் வருவாயே முற்றிலுமாக முடங்கியுள்ள நிலையில் நாங்கள் எங்கிருந்து அவர்களுக்கு ஊதியம் வழங்குவது. தற்போது தொழிலே நொடிந்து போகும் நிலையில் தான் இருக்கிறோம். இந்த சூழ்நிலையிலும் எங்களிடம் பணியாற்றும் தொழிலாளர்களை பத்திரமாக பார்த்துக் கொள்கிறோம்.
பெரு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் தங்களது பணிக்கான தொகையை கொடுப்பதற்கு 60 நாள்களுக்கு மேல் எடுத்துக் கொள்கின்றனர், ஆனால் வங்கிகளில் நாங்கள் பெரும் கடன்களை திரும்ப செலுத்த 90 நாள்களுக்கு மேல் எடுத்துக் கொண்டால் எங்களது கடன் வாராக்கடன் பட்டியலில் சேர்க்கப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் நாங்கள் கடன் பெற வசதி ஏற்படுத்தி தர வேண்டும், வரி, மின்சாரம் உள்ளிட்டவற்றில் சலுகைகள் வழங்க வேண்டும். இல்லையென்றால் ஏராளமான சிறு குறு தொழில்கள் மொத்தமாக மூடப்படும்" என்றார் ஆதங்கத்துடன்.
இதையும் படிங்க: 'தமிழ்நாட்டிற்கு ரூ.45 ஆயிரம் கோடி பாக்கி; வழங்குமா மத்திய அரசு?' - பேராசிரியர் ஜோதி சிவஞானம் பதில்