பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்ற நடவடிக்கைகளால் கடந்த இரண்டாண்டுகளாக நாட்டின் பொருளாதாரத்தில் மந்தத்தன்மை ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து மீண்டு வர மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாகக் கடந்த இரண்டு காலாண்டில் ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தைக் குறைத்தது. இதன் மூலம் முதலீடு பெருகி உற்பத்தியை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இதற்கு பலன் கிடைக்கும் விதமாக பி.எம்.ஐ அமைப்பின் தொழிற்துறை குறித்த சர்வேயில் உற்பத்தி துறை ஏற்றம் கண்டது. கடந்த ஏப்ரல் மாதம் வரை 50 புள்ளிகளுக்குக் கீழ் இருந்த நாட்டின் உற்பத்தித்துறை குறியீடு மே மாதத்தில் அதிகபட்சமாக 52.7 புள்ளிகளைத் தொட்டது. இந்நிலையில் ஜூன் மாதம் உற்பத்தித்துறை மீண்டும் சரிவைக் கண்டுள்ளது. உள்நாட்டு, வெளிநாட்டுச் சந்தையில் தேவையில் ஏற்பட்ட வீழ்ச்சியே இந்த சரிவுக்குக் காரணம் எனப் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
வரும் 5ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் தொழில்துறை, உற்பத்தித்துறை மீண்டெழச் செய்யும் அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.