கரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒட்டுமொத்த தொழில்துறையும் முடங்கியுள்ளது. இதன் காரணமாக ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிறு, குறு தொழில் நிறுவனங்கள் முற்றிலுமாக முடங்கியுள்ளதால் வேலையின்மை அபாயம் உருவெடுத்துள்ளது.
இந்தச் சூழலை சாமாளிக்கும் விதமாக மத்திய அரசு முக்கிய நிதி அறிவிப்புகள் மேற்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சார்பில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலை சமாளிக்க மத்திய அரசு ஏழை மக்களின் வங்கிக் கணக்கில் ரூ.7,500 உதவித்தொகையை நேரடியாக செலுத்த வேண்டும்.
மேலும் சிறு, குறு நிறுவனங்கள்தான் இந்தியாவின் முதுகெலும்பு, இந்தியாவின் 87 விழுக்காடு வேலைவாய்ப்பு இதைச் சார்ந்தே இயங்கும் நிலையில் சிறு, குறு வணிகர்கள் பாதிக்கப்படாத வண்ணம் அவசர கால நிதி அவர்களிடம் நேரடியாக சென்றடைய மத்திய அரசு வழிவகை செய்யவேண்டும். சிறு, குறு வணிகத்தில் கட்டமைப்பு ரீதியாக மாற்றம் கொண்டுவர வேண்டிய காலம் இது. மேலும், வரி கொள்கையில் உள்ள சிக்கல்களை களைய அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஊழியர்களின் ஊதியத்தைக் கட் செய்ய ஏர்ஏசியா முடிவு