கரோனா வைரஸ் பாதிப்பால் உலகளவிலான பொருளாதார மந்தநிலை ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. உலகப் பொருளாதார பெருஞ்சக்திகளான சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் கரோனா வைரசால் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. அத்துடன் ஐரோப்பிய நாடுகள், இந்தியாவிலும் இந்த வைரஸ் பாதிப்பு தீவிரமாகப் பரவிவருகிறது. இந்த வைரஸ் பாதிப்பு அமெரிக்காவில் கடும் பொருளாதாரச் சரிவை ஏற்படுத்தும் என அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலும் கடந்த ஒரு வாரமாக கரோனா பாதிப்பு தீவிரமைடந்துள்ள நிலையில், தற்போது நாட்டின் பெரும் பகுதி முடங்கியுள்ளது. பொருளாதார செயல்பபாடுகள் முடங்கியுள்ளதால் இந்தியாவின் பொருளாதாரம் வெகுவாகப் பாதிப்பைச் சந்திக்கும் என சர்வதேச பொருளாதார ஆய்வு நிறுவனம் மூடீஸ் எச்சரித்துள்ளது.
எனவே வரும் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 5.3 விழுக்காடாக குறையும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது .ஏற்கனவே இந்தியாவின் வங்கித் துறை கடும் சரிவைச் சந்தித்துவரும் நிலையில் தற்போது, கரோனா வைரசின் தாக்கமும் இந்தியச் சந்தையை வெகுவாகப் பாதிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஐரோப்பிய ஒன்றியம், உலகப் பெருஞ்சக்திகளான ஜி-7 நாடுகள், ஜி -20 நாடுகளும் கடும் பொருளாதார சரிவைச் சந்திக்கும் என மூடீஸ் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா பாதிப்புக்கு உதவிக்கரம் நீட்டும் ஆனந்த் மகேந்திரா