இந்தியாவில் பணத்தின் தேவை, புழக்கம் குறித்து மத்திய வங்கியின் நிபுணர்கள் குழுவான ஜனக் ராஜ், இந்திரனில் பட்டாச்சார்யா, சமீர் ரஞ்சன் பெஹெரா, ஜாய்ஸ் ஜான், பீமப்பா அர்ஜுன் தல்வார் ஆகியோர் ஆய்வு நடத்தினார்கள்.
இதையடுத்து, ஆய்வின் முடிவு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், “இந்தியாவில் கடந்தாண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் அதிக பணப்புழக்கம் இருந்துள்ளது. நெல், கோதுமை உள்ளிட்டவற்றின் அறுவடையின் காரணமாகவும், குடி பத்வா, பொங்கல், பைசாக்கி, உகாதி உள்ளிட்ட பண்டிகைகளின் காரணமாகவும், இந்த மாதங்களில் அதிக பணப்புழக்கம் இருந்துள்ளது. மே, ஜூன், ஜூலை பருவமழைக்காலம் என்பதால் அந்த மாதத்தில் பணப்புழக்கம் சரிந்துள்ளது.
மற்ற மாதங்களைக் காட்டிலும் பண்டிகை மாதங்களான அக்டோபர் முதல் டிசம்பர் வரைதான் அதிக பணப்புழக்கம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், தீபாவளியின்போது சுமார் 2.2 விழுக்காடும், தசராவில் 1.1 விழுக்காடும், ஈகைத் திருநாளில் 0.2 விழுக்காடும் மட்டுமே பணப்புழக்கம் அதிகரித்துள்ளது.
அதுமட்டுமின்றி பொதுத் தேர்தல்கள் நடைபெறும் காலகட்டத்தில் ஒவ்வொரு வாரமும் சராசரியாக 0.2 விழுக்காடு பணப்புழக்கம் அதிகரித்துள்ளது" என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “தேசிய அளவிலான அல்லது பெரிய மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றால் பணப்புழக்கம் அதிகமாக இருக்கின்றது. தற்போதைய பணப்புழக்க குறைவிற்கு காரணம் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை. அதனால், நாடு டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் அதிகமாக கவனம் செலுத்த வேண்டியுள்ளது” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க...இந்தியனாக தலை நிமிருங்கள்: ஜியோ தருகிறது முற்றிலும் இந்திய தயாரிப்பு தகவல் சாதனங்கள்!