'ரூகோ' என்ற புதிய திட்டத்தின் அறிமுக விழா, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இந்த ரூகோ திட்டத்தின் மூலம் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்யை பயோ டீசலாக மாற்றி மறுசுழற்சியாகப் பயன்பாட்டிற்கு கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், ஓ.என்.ஜி.சி, பாரத் பெட்ரோலியம் உள்ளிட்டவற்றின் உதவியுடன் இந்த திட்டம் 100 நகரங்களில் அமல்படுத்தவுள்ளது.
இந்த திட்டத்தை தொடங்கிவைத்து பேசிய மத்திய எரிவாயுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிராதான், இந்தியாவில் அபரிமிதமான அளவில் பயோ டீசல் கிடைப்பதாகவும், அதை வீணாக்காமல் எரிவாயு தேவைக்குப் பயன்படுத்த இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மத்திய அரசின் இலவச எரிவாயு இணைப்பு திட்டத்தின் மூலம் கடந்த செப்டம்பர் மாதம் வரை 8 கோடி காஸ் இணைப்பு இந்தியா முழுவதும் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மக்களின் சுகாதாரம் மேம்பட்டுள்ளது என்றார்.
மேலும், பயோ டீசல் பயன்பாட்டை கணிசமாக உயர்த்துவதே இந்த அரசின் லட்சியம் என எரிவாயுத்துறை அமைச்சர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.