கரோனா தொற்று பாதிப்பால் நாட்டின் பொருளாதாரம் மிகப் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்கும் வகையில் மத்திய அரசு 20 லட்சம் கோடி ரூபாய் சிறப்பு நிதி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதற்கு வரவேற்புகள் ஒருபுறம் இருந்தாலும், அரசின் இந்த நடவடிக்கை எந்தப் பலனையும் தராது என ஒரு சில பொருளாதார நிபுணர்களும், எதிர்க்கட்சியினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய நிதித்துறை மற்றும் பெரு நிறுவன விவகாரங்கள் துறை இணையமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் ஈடிவி பாரத்திற்கு பிரத்யேக நேர்காணல் வழங்கியுள்ளார். அதில், நடுத்தர வர்க்கத்தினருக்கு அரசு அறிவித்த சலுகைகள் என்ன, ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்தால் சந்தையில் தேவை அதிகரிக்குமா, நாட்டில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்...
கேள்வி: குடிபெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்னையை மத்திய அரசு சரியாக கையாளவில்லை என புகார் தெரிவிக்கப்படுகிறதே?
குடிபெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 5 கிலோ தாணியம், 1 கிலோ பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்க 3,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. குடிபெயர்ந்த தொழிலாளர்களை கவனித்துக்கொள்ள வேண்டிய முக்கிய கடமை அவர்கள் தங்கியிருக்கும் மாநிலத்துக்கும், அவர்களது சொந்த மாநிலத்துக்கும்தான் உள்ளது. இது போன்ற அசாதாரண சூழலில் இரு மாநிலங்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இங்கு மத்திய அரசின் பணி என்பது அவர்களுக்கு போக்குவரத்து வசதி செய்து தருவதே. அதன்படி, குடிபெயர்ந்த தொழிலாலர்களுக்காக இலவச ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன, அவர்களுக்கு இலவச உணவும், தண்ணீர் பாட்டில்களும் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை குடிபெயர்ந்து வாழும் தொழிலாளர்கள் வீடு திரும்ப 3,840 ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன, இதன்மூலம் சுமார் 52 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் சொந்த ஊர் திரும்பியுள்ளனர்.
கேள்வி: நிதி நெருக்கடி காரணமாக நடுத்தர வர்க்கத்தினருக்கு மத்திய அரசு எந்த சலுகையும் அறிவிக்கவில்லை என கூறப்படுகிறதே?
நாட்டின் முதுகெலும்பாக விளங்கி, அதிக அளவில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கடன் உத்திரவாத திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நடுத்தர வர்க்கத்தினர் கையில் அதிக பணம் கிடைக்க வேண்டும் என்பதற்காக நேரடி வரிக்கழிவு (TDS) விகிதம் 25 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த குறைப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை அமலில் இருக்கும். இதன்மூலம் 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சந்தையில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.
கேள்வி: சலுகைகள் வழங்க பட்ஜெட்டுக்கு மேல் கடன் பெறவில்லை என்றால் ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்தை பொருளாதார ஊக்க திட்டமாக கருத முடியாது என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளாரே?
அளவுக்கு மீறி கடன் பெறக் கூடாது என்ற விதிமுறையை நாங்கள் கடைப்பிடிக்கிறோம், அதே நேரத்தில் ஆத்ம நிர்பர் பாரத் திட்டம் அனைத்து தரப்பு மக்களையும் சென்று சேர வேண்டும் என்பதை உறுதி செய்துள்ளோம்.
கேள்வி: அரசின் ஊக்க அறிவிப்பில், தற்போதைய பொருளாதார சூழலுக்கு முக்கிய தேவையான சந்தையில் தேவையை (demand) அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என நிபுணர்கள் பலரும் சுட்டிக்காட்டுகின்றனரே?
அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் சந்தையில் தேவை அதிகரித்துள்ளது. பிரதம மந்திரி கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ், 41 கோடி பேர் 52,608 கோடி ரூபாய் உதவித் தொகை பெற்றுள்ளனர். இதில், ஜன்தன் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் 20 கோடி பெண்களின் கணக்கில், முதற்கட்டமாக 20 ஆயிரம் கோடி ரூபாய் இருப்பு வைகக்கப்பட்டுள்ளது. 9 கோடி விவசாயிகளுக்கு 18 ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
சுமார் 2.80 கோடி வயதானவர்கள், கைம்பெண்கள் மற்றும் மாற்றுத் திறணாளிகளுக்கு இரண்டு தவணைகளில் 2 ஆயிரத்து 807 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு பிஃஎப் கணக்கில் ஊழியர்களின் பங்காக 12 சதவிகிதமும், நிறுனத்தின் பங்காக 12 சதவிகிதமும் அரசு செலுத்துகிறது. இதன்மூலம், மக்களுக்கு 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கிடைக்கும். மேலும், அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ள வேளாண்மை சீர்திருத்தங்களால் விவசாயிகளின் வருவாய் அதிகரிக்கும்.
கேள்வி: நிறுவனங்களுக்கு கடன் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வங்கிகளில் பெருகி வரும் வாராக்கடன் பிரச்னையை அரசு கவனத்தில் கொண்டுள்ளதா?
வங்கிகளின் நிலை குறித்து நன்கறிந்து, நிபுணர்களிடம் கலந்தாலோசித்த பின்னரே இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அவசர கடனுதவியாக வழங்கும் 3 லட்சம் கோடி ரூபாய்க்கும், அதாவது அசலுக்கும், வட்டிக்கும் அரசு முழு உத்தரவாதம் வழங்கியுள்ளது.
கேள்வி: ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்ட சுற்றுலாத்துறை, போக்குவரத்து, ஏற்றுமதி உள்ளிட்ட துறைகளுக்கு சிறப்பு அறிவிப்புகள் வெளியிட வாய்ப்புள்ளனவா?
சுற்றுலா, போக்குவரத்து மற்றும் ஏற்றுமதி துறை சார்ந்த நிறுவனங்கள் அனைத்துக்கும் அரசு அறிவித்த கடன் சலுகைகள் பொருந்தும். தற்போது அறிவிப்புகள் ஏதும் வெளியிடப்படவில்லை, இருப்பினும் தேவைக்கு ஏற்ப அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும்.
கேள்வி: கரோனா பரவலுக்குப் பிறகு நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. இதனைத் தடுக்க சிறப்புத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளனவா?
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கு வரலாற்றிலேயே இல்லாத வகையில் 1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளோம். இதன்மூலம் 300 கோடி நபர்-நாட்கள் (person days) வேலைவாய்ப்புகள் உருவாகும். இதன்மூலம் நகர்ப்புறத்தில் இருந்து வீடு திரும்பும் குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும். மேலும், அரசின் புதிய சீர்திருத்தங்களால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.
இதையும் படிங்க: 'ஒரே தேசம், ஒரே சந்தை: இனி விவசாயிகளே பொருள்களின் விலையை நிர்ணயம் செய்யலாம்!'