டெல்லி: ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (ஏஐஐபி), உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவை இணைந்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக 60 ஆயிரம் கோடி ரூபாய் திட்டத்திற்கு பகுதி நிதியுதவி வழங்குவதற்காக இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடிவருகிறது.
சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் லட்சியத் திட்டம் குறித்து இந்திய அரசு விவாதித்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் சுகாதார உள்கட்டமைப்பை உருவாக்குவது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் (ஐசிஎம்ஆர்) சோதனை வசதிகளை மேம்படுத்துவது உள்பட பல தீர்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (ஏஐஐபி) துணைத் தலைவர் டி.ஜே. பாண்டியன் கூறியுள்ளார்.
இது குறித்து மத்திய நிதித்துறை அமைச்சகம் திட்டமிட்டு வருவதாகவும், ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் பட்சத்தில் உடனடியாக இந்தியாவுக்கு நிதியளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், கோவிட்-19 உதவிக்காக, இந்தியாவுக்கு ஏஐஐபி முறையே 500 மில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் 750 மில்லியன் அமெரிக்க டாலர் கடன்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது என்றார்.
கோவிட்-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராட இந்தியாவுக்கு 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவி வழங்க சீனாவின் பலதரப்பு நிதி நிறுவனங்கள் ஒப்புதல் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.