நாட்டை ரூபாய் ஐந்து லட்சம் கோடி டாலர் பொருளாதார சக்தியாக மாற்ற வேண்டும் என்பதைத் தாரக மந்திரமாக மத்திய அரசு கொண்டுள்ளது. சவாலானதாக கருதப்படும் இந்த இலக்கை இந்தியா எட்டிப்பிடிக்க முடியுமா எனப் பலரும் ஐயத்துடன் நோக்கியுள்ளனர்.
'சாத்தியமற்ற ஒன்று என்பது இவ்வுலகில் எதுவுமில்லை' என்று மாவீரன் நெப்போலியன் கருத்தின்படி, இந்த இலக்கை சாத்தியப்படுத்த முடியும். இருப்பினும் எந்த ஒரு இலக்குக்கும் திட்டமிடுதல் என்பது மிக அவசியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. ரூபாய் ஐந்து லட்சம் கோடி டாலர் என்ற இலக்கை எட்டிப்பிடிக்க பல்வேறு சவால்களையும் தாண்டியே செல்லவேண்டியிருக்கும் என்பதை நாம் முதலில் உணரவேண்டும்.
அரசின் முன் காத்திருக்கும் சவால்கள்:
இந்தியா தற்போது பொருளாதாரத் தேக்கநிலை என்ற கடினமான சவாலை எதிர்கொண்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாகவே கடும் மந்தநிலையை இந்தியப் பொருளாதாரம் சந்தித்துவருகிறது. உற்பத்தித் துறை, தொழில் துறை பெருமளவில் முடங்கியுள்ளதாக அனைத்துப் புள்ளிவிவரங்களும் தெரிவிக்கின்றன. பணமதிப்பு நீக்கம், சரக்கு மற்றும் சேவை வரி என்ற இரு பெரும் நடவடிக்கையால் இந்தியாவின் சந்தை பெரும் ஆட்டத்தைக் கண்டுள்ளது. இதன் காரணமாகவே மந்தநிலையானது தொடர்ந்துவருகிறது.
மத்திய அரசின் வரி வருவாய் 1990-91ஆம் ஆண்டில் 30 ஆயிரம் கோடியிலிருந்து தற்போது ரூ.11.99 லட்சம் கோடியாக இருந்தது. இருப்பினும் 2014-15 ஆண்டுக்குப்பின் வரிவருவாய் அரசுக்கு போதுமானதாக இல்லை. காரணம் நாட்டின் முதலீடு, செலவீனங்களுக்கான தேவை வெகுவாக அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதற்கேற்ற வருவாய் இல்லாததால் இந்த மந்தநிலையானது தொடர்ந்துவருகிறது.
விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் இது:
இத்தகைய சவாலான சூழ்நிலைச் சந்தித்துள்ள இந்தியா ரூபாய் ஐந்து லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக உயர்வதற்கு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கையில் இறங்க வேண்டும். முதலீட்டை அதிகரித்து வளர்ச்சியை மேம்படுத்த உற்பத்தித் துறை, வங்கித் துறை, வரிவிதிப்பு, தனியார் முதலீடு போன்ற அம்சங்களில் அடிப்படை மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்.
இதன்மூலமே பொருளாதார உறுதித்தன்மை மேம்பட்டு வளர்ச்சி அதிகரிக்கும். கனவு இலக்கான ரூபாய் ஐந்து லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக இந்திய உருவெடுக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.