சமூக வலைதள நிறுவனங்களுக்கும், ஓடிடி தளங்களுக்கும் புதிய விதிமுறைகளை மத்திய அரசு வகுத்து கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்டது. அந்தப் புதிய விதிகள், இன்று (மே.26) முதல் அமலுக்கு வருகிறது. பல நிறுவனங்கள் புதிய விதிகளுக்கு கால அவகாசம் கோரியுள்ளதால், அத்தளங்கள் இயங்க அனுமதிக்கப்படுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், மத்திய அரசின் புதிய சட்ட விதிகளுக்கு எதிராக வாட்ஸ்அப் நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
அதில், "பயனர் அனுப்பும் ஒவ்வொரு செய்தியும் எங்கிருந்து யாருக்கு அனுப்பப்படுகிறது என்பதை புதிய விதிகள் கண்காணிக்கச் சொல்வதால், இது தனியுரிமை மீறலாகும். 'எண்ட் டூ எண்ட் என்கிரிப்ஷன்' விதிகளை முறியடிக்கும் வகையில் புதிய விதிகள் இருக்கின்றன" எனக் குறிப்பிட்டுள்ளது.
இந்த வழக்கு விரைவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.