டெல்லி: இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் படி, கடந்த மே மாதம் 15 ஆம் தேதி முதல் ஜூன் 15 வரை, சுமார் 20 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
முடக்கப்பட்ட கணக்குகளில் சுமார் 95 விழுக்காடு கணக்குகள், அங்கீகாரம் பெறாமல் ஒரே நேரத்தில் பல மெசேஜ்களை அனுப்பக்கூடிய கணக்குகள் ஆகும்.
இந்த மெசேஜ்களால் சாதி, மத, இன மோதல்கள், வன்முறைச் சம்பவங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், இத்தகைய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒருவரின் கணக்கு மூன்று கட்டங்களாக ஆராயப்படும். அதாவது பதிவு செய்தல், செய்தி அனுப்புதல் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு விதிமுறைகளை மீறும் பயனாளரின் கணக்குகள் முடக்கப்படும்
மே 15 - ஜூன் 15 காலகட்டத்தில், பாதுகாப்பு சிக்கல் உள்பட பல வகைகளில் தீங்கு விளைவிக்கும் கணக்குகள் குறித்து இதுவரை 345 புகார்கள் வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு வந்துள்ளன.
அதில், 63 கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் பயனாளர்கள் அளிக்கும் புகார்கள் உடனடியாக பரீசிலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ட்விட்டர் திரெட்ஸ் போல ஃபேஸ்புக் பயனர்களுக்கு புதிய அம்சம்!