உலகம் முழுவதும் இணையவழித் தகவல் பரிமாற்றச் செயலியாக வாட்ஸ்அப் செயலி 200 கோடிக்கும் மேற்பட்ட பயனாளர்களால் 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் உபயோகப்படுத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில், வாட்ஸ்அப் செயலியின் சமீபத்தில் அப்டேட்டில் கொண்டுவந்துள்ள தனிநபர் கொள்கை மாற்றத்தால், நமது தரவுகள் பேஸ்புக்குடன் இணைந்துவிடும் என்ற செய்தி பரவியதைத் தொடர்ந்து, பலர டெலிகிராம், சிக்னல் செயலிகளின் பக்கம் தங்களது கவனத்தை திருப்பினர்.
இதையடுத்து, அவசர அவசரமாக வாட்ஸ்அப் நிறுவனம் உங்களின் தனிப்பட்ட தகவலை யாரும் பார்த்திட முடியாது என அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், கடந்த மூன்று நாள்களில் டெலிகிராம் செயலியில் புதிதாக இரண்டரை கோடி பயனாளர்கள் இணைந்துள்ளதாக அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " ஜனவரி முதல் வாரம் வரை, 50 கோடி பயனாளர்கள் டெலிகிராம் செயலியை பயன்படுத்திவந்தனர். ஆனால், ஜனவரி 6 முதல் 10வரையிலான காலக்கட்டத்தில் புதிதாக இரண்டரை கோடி பயனாளர்கள் இணைந்துள்ளனர். அதில் இந்தியாவில் மட்டுமே ஒன்றரை கோடி பயனாளர்கள்” எனக் குறிப்பிட்டிருந்தனர்.
உலகின் இரண்டாவது பெரிய தொலைத் தொடர்பு சந்தையாக திகழும் இந்தியா, அதிகளவிலான நுகர்வோர்களை கொண்டுள்ளது. அக்டோபர் 30, 2020 நிலவரப்படி, மொத்த தொலைபேசி இணைப்புகள் 117 கோடியாக இருந்தன, அவற்றில் 115 கோடி மொபைல் இணைப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது.