டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியச் சந்தையில் முக்கிய வாகன தயாரிப்பு நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது. நடப்பு நிதியாண்டு இம்மாத (மார்ச்) இறுதியுடன் முடிவடையும் நிலையில், 2018-2019 நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மொத்தம் 2 லட்சத்து 11 ஆயிரத்து 159 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. அதில் 1 லட்சத்து 22 ஆயிரத்து 592 கார்கள், 69 ஆயிரத்து 741 கனரக வாகனங்கள், 18 ஆயிரத்து 826 வேன்கள் அடக்கம். இந்த விற்பனை மூலம் டாடா மோட்டார்ஸ் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 12.78 சதவிகிதம்வளர்ச்சியைக் கண்டுள்ளது.
இந்நிலையில், அந்நிறுவனத்தின் பயணிகள் வாகன விற்பனைப் பிரிவுத் தலைவர் மயாங்க் பாரிக் கூறியதாவது, சந்தையின் மாற்றங்கள், புறப்பொருளாதாரச் சூழல்கள், உள்ளீட்டு விலை உயர்வு ஆகியவற்றின் காரணமாக வரும் ஏப்ரல் மாதம் முதல் விலை உயர்வு அமலுக்கு வருகிறது. இதன் காரணமாக டியாகோ, ஹேக்ஸா, நேக்ஸான், ஹாரியர், டைகோர் போன்ற வாகனங்களின் விலைகளில் சுமார் 25 ஆயிரம் வரை உயர்விருக்கும் எனக் கூறியுள்ளார்.
ஏற்கனவே ஜாகுவார், லேன்ட்ரோவர், கவாசகி போன்ற நிறுவனங்களும் இந்தியச் சந்தையில் ஏப்ரல் 1 முதல் விலையுயர்வை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.